தேடுதல்

Schönstatt சபையினரைச் சந்திக்கும் திருத்தந்தை Schönstatt சபையினரைச் சந்திக்கும் திருத்தந்தை  

அருள்பணித்துவ வாழ்வில் முன்னேறிச்செல்லுங்கள்: திருத்தந்தை

திருக்குடும்பத்தின் பாதுகாவலியான அன்னை மரியா, அவர்தம் பிள்ளைகளாகிய நம் அனைவர் மீதும் அர்ப்பணிப்புடன்கூடிய தனது அக்கறையைக் காட்டுகிறார் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தூய ஆவியாரின் அருளால் எப்போதும் உங்களைப் புதுப்பித்துக்கொண்டு, குடும்பப் பணியில் புதிய வழிகளைத் திறக்க துணிவு கொள்ளுங்கள் என்றும், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிறுவப்பட்ட உடன்படிக்கையின் ஆன்மிக அழகை ஒளிரச்செய்யுங்கள் என்றும், தன்னைச் சந்திக்க வந்த குழு ஒன்றிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 1, இவ்வியாழனன்று,  Schönstatt சபையின் பொதுப்பேரவையை முன்னிட்டு அச்சபையினரைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு வேண்டுகோள்விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் அருள்பணித்துவ வாழ்வில் இன்னும் நீங்கள் முன்னேறிச் செல்ல உங்களை நான் வாழ்த்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.

சிலுவையில் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் நம் அனைவருக்கும் அன்பின் பலியாக வழங்கப்பட்டுள்ளது (காண்க. மாற்.14:24; 1கொரி.11:25) என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தூய இரத்தமானது, கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவை உருவாக்கியுள்ளது என்றும், இதுவே அன்பு மற்றும், மீட்பின் உடன்படிக்கையாக வெளிப்படுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நீங்கள் திருஅவைக்கும் உலகிற்கும் அழகானதொரு பணியைச் செய்து வருகிறீர்கள், குறிப்பாக, மக்கள் கடந்து செல்லும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் இடர்பாடுகளில் அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றிணைந்த நிலையில், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் அன்பின் உடன்படிக்கையின் அழகை அறிவிக்கிறீர்கள் என்றும் அவர்தம் பணிகள் குறித்து பெருமிதம் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றயைச் சூழலில், பல திருமணங்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகி, அக்குடும்பங்களிலுள்ள முதியவர்களும், குழந்தைகளும் மறக்கப்பட்டு மிகவும் துயரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்துவரும் இந்த இருள் சூழ்ந்த நிலைகளில் நீங்கள் நம்பிக்கையின் செய்தியை சுமந்து செல்பவர்களாக இருக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்.

குடும்பத்தின் இயல்பு, பல்வேறு கருத்தியல்களால் அடிக்கடி தாக்கப்படுவதையும், இது மனிதரின் ஆளுமை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தைப் பாதுகாக்கும் அடித்தளங்களை அழிக்க முற்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாவற்றிக்கும் மேலாக, இது, குடும்பங்களுக்குள்ளேயே, வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே அடிக்கடி இடைவெளியை உருவாக்குகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

திருக்குடும்பத்தின் பாதுகாவலியான அன்னை மரியா, அவர் தம் பிள்ளைகளாகிய நம் அனைவருக்கும், குறிப்பாக உடல் மற்றும் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ள  அனைவர்மேலும் அர்ப்பணிப்புடன்கூடிய தனது அக்கறையைக் காட்டுகிறார் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2022, 14:47