தேடுதல்

 Populorum Progressio பாப்பிறை பிரறன்பு நிறுவனத்தினருடன் திருத்தந்தை Populorum Progressio பாப்பிறை பிரறன்பு நிறுவனத்தினருடன் திருத்தந்தை  

நல்ல சமாரியர் குழுமமாகத் திகழ்வோம் : திருத்தந்தை

ஏழைகளை உதவி பெறுபவர்களாக மட்டுமே பார்க்கக்கூடாது. மிகவும் அவசரமான தேவைகளைக் கண்டறியும் செயலில் அவர்கள் பங்கேற்பவர்களாகவும் இருக்க வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒன்றிணைந்த பாதையில் பயணிப்பதன் வழியாக, மக்களில் கிறிஸ்துவைக் கண்டு, அவரின் துயருற்ற தூய உடலின் காயங்களைத் தொடுவதிலும், ஆறுதல் அளிப்பதிலும், பணிகளில் ஈடுபாடு கொள்வதிலும், நல்ல சமாரியர் குழுமமாக நாம் வளர வேண்டும்.  என்று பாப்பிறை பிறரன்புத் தொண்டு நிறுவனத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 16, இவ்வெள்ளியன்று, Populorum Progressio என்ற பாப்பிறை பிரறன்பு நிறுவனத்தை  Populorum Progressio  நிதி அமைப்பாக உருவாக்குதல் தொடர்பாக அதன் உறுப்பினர்களுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தப் பிறரன்பு தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக,  கடந்த முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றியவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனம் இப்போது புது வடிவம் பெற்றாலும், அதன் பணிகளைத் தொடர்ந்தாற்றி, இதனைத் பாப்பிறை பிறரன்புத் தொண்டு நிறுவனமாகத் தொடர்ந்து நிலை நிறுத்துங்கள் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் வாழ்கின்றன என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Aparecida என்ற இறுதி ஆவணம் குறிப்பிடுவது போல், புறந்தள்ளப்பட்டவர்கள் என்பவர்கள் சுரண்டப்படுபவர்கள் மட்டுமல்ல, சிறுதொழில் புரிவோரும் ஆவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய நமது ஒற்றுமை முயற்சிகள், மாற்றத்திற்கான வழிகள் சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்முயற்சிகள் அறிவார்ந்த விதமாகவும், தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டால், அவைகள் பலரை ஊக்குவிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருப்பீட நிர்வாகத் தலைமையகத்தில் நாம் மேற்கொண்டுவரும் சீர்திருத்தங்கள் Praedicate Evangelium என்ற திருப்பீடக் கொள்கைத் திரட்டிலும் பல்வேறு மாற்றங்களை வெளிப்படுத்தி இருக்கிறது என்றும், இவற்றில் Populorum Progressio  என்ற பாப்பிறை பிறரன்புத் தொண்டு நிறுவனமும் ஒன்று என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

30 வயதை எட்டியுள்ள Populorum Progressio என்ற பாப்பிறை பிறரன்புத் தொண்டு நிறுவனம், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் விருப்பத்தின்படி, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் உறுதிப்படுத்தியபடி இலத்தின் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஏழைகளின் நலன்களுக்காகப் பணியாற்றி வந்துள்ளது.

திருத்தந்தை ஆறாம் பால் அவர்கள் மார்ச் 26, 1969 அன்று, அவரது திருத்தூது மடலான Populorum Progressio வின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், ஏழை விவசாயிகளுக்கு உதவுவதற்காகவும், இலத்தீன் அமெரிக்காவில் வேளாண்மை சீர்திருத்தம், சமூக நீதி மற்றும் அமைதியை மேம்படுத்தவும் ஒரு நிதியை நிறுவினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2022, 15:05