இளையோர், மரியா போன்று விரைந்துசென்று பிறருக்கு உதவ…
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
மற்றவருக்கு உதவிசெய்ய விரைந்து சென்ற அன்னை மரியாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறும், வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிக்குமாறும், உலக இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்டபின்னர், 2023ஆம் ஆண்டில், போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில் நடைபெறவிருக்கும் 37வது உலக இளையோர் நாளுக்கென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள மூன்றாவது செய்தி, செப்டம்பர் 12, இத்திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்.1:38). என்ற தலைப்பில் 2019ஆம் ஆண்டில் பானமாவில் உலக இளையோர் நாள் நடைபெற்றதை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, அந்நிகழ்வுக்குப்பின், புறப்படு என்ற அறைகூவலோடு 2023ஆம் ஆண்டில், லிஸ்பனை நோக்கி நம் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உலக இளையோர் நாள் செய்தியில் பல்வேறு தலைப்புக்களில் சிந்தித்தோம், அவற்றில் “புறப்படு” என்ற சொல்லே பொதுவானதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, “மரியா புறப்பட்டு ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்” (லூக்.1:39) என்ற 37வது உலக இளையோர் நாள் கருப்பொருள், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழும்பி, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வு குறித்து விழிப்பாயிருக்க அழைப்புவிடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று, மற்றும், போரின் துயர்நிறைந்த இந்நாள்களில், மரியா போன்று, அனைவரும், குறிப்பாக, இளையோர், அடுத்திருப்பவரைச் சந்திப்பதற்குப் புறப்பட்டுச் செல்லவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, பல இளையோருக்கு, 2023ஆம் ஆண்டு ஆகஸ்டில் லிஸ்பனில் கிடைக்கும் அனுபவம், அவர்களுக்கும், மனித சமுதாயம் முழுவதற்கும் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மரியா எழுந்தார்
வானதூதர் மரியாவுக்கு கிறிஸ்து பிறப்பு பற்றி அறிவித்தபின்பு, அவர் தன்மீது கவனம் செலுத்தியிருக்கலாம், மாறாக, அவர் தன்னை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, தன் வாழ்வில் கடவுளின் திட்டம் சிறந்ததாக இருக்கும் என்பதில் உறுதியாய் இருந்து, புறப்பட்டு பயணத்தை மேற்கொண்டார் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
கடவுளின் ஆலயமாகவும், மற்றவருக்குப் பணியாற்றவும், நற்செய்தியை அனைவருக்கும் எடுத்துச்செல்லவும் பயணம் மேற்கொள்ளும் திருஅவையின் உருவமாகவும் மரியா உள்ளார் என்று கூறியுள்ள திருத்தந்தை, இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வுகளில், “விழித்தெழு”, “புறப்படு” என்ற சொல்லாடல்களே அடிக்கடி இருப்பதை நாம் காண்கிறோம் என்று கூறியுள்ளார்.
கண்ணாடி முன்நின்று தங்களைப் பற்றித் தியானிக்க மறுக்கின்ற மற்றும், ஒரு வலைக்குள் சிக்கியுள்ள பயணப்படும் இளையோருக்கு ஆண்டவரின் தாய், எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும், மரியா எப்போதும் தன்னைப் பற்றி நினைக்காமல் மற்றவர் பற்றி நினைத்தார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
புறப்பட்டு விரைந்து சென்றார்
மரியா விரைந்து சென்றது, பணியாற்ற அவர் கொண்டிருந்த ஆவலின் அடையாளமாக உள்ளது எனவும், உடனடித் தேவைகளை நாம் சந்திக்கும்போது விரைந்து சென்று உதவ வேண்டும் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, நலமான விரைவு, எப்போதும் மேல்நோக்கியும், மற்றவர் நோக்கியுமே நம்மை இட்டுச்செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்பு இளையோரே, உங்களுக்கு எனது செய்தி, இயேசுவே எனவும், இம்மாபெரும் செய்தியே திருஅவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், இயேசு நம்மீது வைத்துள்ள எல்லையில்லா அன்பால் மீட்பையும் புதிய வாழ்வையும் நமக்குத் தருகிறார் எனவும் திருத்தந்தை எடுத்தியம்பியுள்ளார்.
லிஸ்பனுக்கு எல்லாரும்...
லிஸ்பனில் உலக இளையோர் நாள் நிகழ்வுக்கு வருகை தருகின்ற இளையோர் கடவுளையும், நம் சகோதரர் சகோதரிகளையும் சந்திப்பதன் மகிழ்வை அனுபவிப்பார்கள் என்ற தன் நம்பிக்கையை தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியா போன்று எழுந்து, விரைவாகப் புறப்படுவோம் என தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்