தேடுதல்

AVSI மனிதாபிமான அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ். AVSI மனிதாபிமான அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ். 

சமூக, அரசியல் செயலற்றதன்மை சில பகுதிகளை தனிமைப்படுத்துகிறது

திருஅவை, துயருறும் மக்களுக்கு, திறந்த கதவுகளைக்கொண்ட இல்லமாகவும், உடன்பிறந்த உணர்வு நிலவும் இடமாகவும் இருக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

“சிரியாவில் கள மருத்துவமனைகள் திட்டம்” என்ற பெயரில் அந்நாட்டில் துயருறும் மக்களுக்கு நலவாழ்வு உதவிகளை ஆற்றிவரும் AVSI மனிதாபிமான அமைப்பினருக்கு   தன் நன்றியைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 3, இச்சனிக்கிழமையன்று அவ்வமைப்பின் ஏறத்தாழ 150 உறுப்பினர்களை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, “உன் காயம் கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்க யாரால் முடியும்? ” (2:13) என்ற புலம்பல் நூல் வார்த்தைகளே, சிரியாவை நினைக்கும்போது மனதில் எழுகின்றன என்று கூறியுள்ளார்.  

தன் தோள்களில் மாற்றுத்திறனாளி மகன் ஒருவனைச் சுமக்கும் தந்தையின் புகைப்படம் ஒன்றை அண்மையில் கலைஞர் ஒருவர் தன்னிடம் கொடுத்தபோது அதைப் பார்த்து மிகவும் கவலையடைந்தேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, இப்புகைப்படம், கடந்த 12 ஆண்டுகால வன்முறைத் தாக்குதல்களால் சிரியா மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை நினைவுபடுத்தியது என்று தெரிவித்துள்ளார்.

அழிவு, அதிகரித்துவரும் மனிதாபிமானத் தேவைகள், சமூக மற்றும், பொருளாதாரச் சரிவு, ஏழ்மை, பசி பட்டினி போன்றவற்றில் உலகில் மிக அதிகமாகத் துன்புறும் நாடுகளில் ஒன்றாக சிரியா உள்ளது என, பன்னாட்டு ஆய்வாளர்கள் நமக்குக் கூறுகின்றனர் என்று கூறியுள்ளதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

AVSI மனிதாபிமான அமைப்பினருடன் திருத்தந்தை
AVSI மனிதாபிமான அமைப்பினருடன் திருத்தந்தை

சமூக, மற்றும், அரசியல் செயலற்றதன்மை, உலகின் சில பகுதிகளை தனிமைப்படுத்துகிறது எனவும், உள்நாட்டிலும், பன்னாட்டு அளவிலும் இடம்பெறும் மோதல்கள், வேலைவாய்ப்புகள் சுரண்டப்படல் போன்றவை, எண்ணற்ற மக்களை புறக்கணிக்கப்பட்ட மற்றும், சாலையோரங்களில் கைவிடப்பட்ட நிலைகளுக்கு உள்ளாக்குகின்றன எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

சிரியாவில் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்று 12 ஆண்டுகள் ஆகியும், இன்னும் மக்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இத்தகைய மக்களுக்கு, திருஅவை, திறந்த கதவுகளைக்கொண்ட இல்லமாகவும், உடன்பிறந்த உணர்வு நிலவும் இடமாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இத்தகைய கடுந்துன்பங்களுக்கு மத்தியில், திருஅவை, கள மருத்துவமனைகளில் உடல் அளவிலும் ஆன்மிக அளவிலும் காயமடைந்தோரைக் குணப்படுத்தும் நல்ல சமாரியர்களாகப் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளது என்றுரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

சிரியாவில் பல முஸ்லிம்கள், திருஅவையின் கள மருத்துவமனைகளால் உதவிபெற்றுள்ளது, பல்வேறு மதங்கள் மற்றும், இனத்தவர்க்கிடையே நல்லிணக்க வாழ்வைப் பேணி வளர்க்க உதவுவதாக உள்ளது என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 செப்டம்பர் 2022, 15:14