திருத்தந்தை செப்டம்பர் மாதம்  திருப்பயணம்  செய்ய இருக்கும் கஜகஸ்தான் நாடு திருத்தந்தை செப்டம்பர் மாதம் திருப்பயணம் செய்ய இருக்கும் கஜகஸ்தான் நாடு  

திருத்தந்தையின் கஜகஸ்தான் திருத்தூதுப் பயண விவரங்கள்

செப்டம்பர் 15ம் தேதி, நூர்-சுல்தான் நகரில் உலக மற்றும், பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் 7வது மாநாட்டின் நிறைவு அறிக்கையை வாசிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை கஜகஸ்தான் நாட்டிற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை, திருப்பீட செய்தித் தொடர்பகம், ஆகஸ்ட் 02, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் 13, செவ்வாய் காலை 7.15 மணிக்கு உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, கஜகஸ்தான் நாட்டுத் தலைநகர் நூர்-சுல்தான் (Nur-Sultan) நகருக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரின் பன்னாட்டு விமானத்தளத்தை உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்குச் சென்றடைவார்.

அன்று உள்ளூர் நேரம் மாலை 6.30 மணிக்கு, நூர்-சுல்தான் நகரின் அரசுத்தலைவர் மாளிகையில் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்றபின், அம்மாளிகையிலேயே அரசுத்தலைவரைத் தனியே சந்தித்து உரையாடுவார் திருத்தந்தை. பின்னர், அம்மாளிகையிலுள்ள "Qazaq" இசை நிகழ்ச்சி அறையில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் போன்றேரைச் சந்தித்து உரையாற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 14, புதன் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, நூர்-சுல்தான் நகரின் "அமைதி மற்றும், ஒப்புரவு மாளிகை"யில், உலக மற்றும், பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் ஏழாவது மாநாட்டை ஆரம்பித்து வைத்து, உரையொன்றும் ஆற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்று பகல் 12 மணிக்கு, நூர்-சுல்தான் நகரின் "அமைதி மற்றும், ஒப்புரவு மாளிகை"யில்,     பல்வேறு மதங்களின் தலைவர்களோடு கூட்டம் ஒன்றையும் நடத்தும் திருத்தந்தை, அன்று மாலை 4.45 மணிக்கு, நூர்-சுல்தான் நகரின் “Expo” வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.

செப்டம்பர் 15, வியாழன் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு நூர்-சுல்தான் நகரின் திருப்பீட தூதரகத்தில், அந்நாட்டில் பணியாற்றும் இயேசு சபையினரைச் சந்திக்கும் திருத்தந்தை, காலை 10.30 மணிக்கு, அந்நகரின் சகாய அன்னை பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், தியாக்கோன்கள், துறவியர், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும், மேய்ப்புப்பணியாளர்கள் ஆகியோரைச் சந்திப்பார்.   

 செப்டம்பர் 15ம் தேதி உள்ளூர் நேரம் மாலை 3 மணிக்கு, "அமைதி மற்றும், ஒப்புரவு மாளிகை"யில், உலக மற்றும், பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் ஏழாவது மாநாட்டின் நிறைவு அறிக்கையை வாசிப்பார் மற்றும், உரையொன்றும் ஆற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

அன்று மாலை 4.15 மணிக்கு நூர்-சுல்தான் பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்று கஜகஸ்தான் நாட்டினருக்கு நன்றி சொல்லி, உரோம் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று இரவு 8.15 மணிக்கு உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைவார்.

கஜகஸ்தான்             

ஆசியக் கண்டத்திலுள்ள கஜகஸ்தான், உலகின் மிகப் பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் முஸ்லிம்கள், மற்றும், 26 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.

மேலும், ஒருவரையொருவர் அன்புகூருங்கள் என்ற அழைப்போடு திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 2001ஆம் ஆண்டில் கஜகஸ்தானில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2022, 14:27