தேடுதல்

உக்ரைன் சிறுவனை அணைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் உக்ரைன் சிறுவனை அணைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் செபங்களுக்கு உக்ரைன் அரசுத்தலைவர் நன்றி

இரஷ்யாவால் உக்ரைனுக்கு இழைக்கப்படும் கொடூரமான செயல்கள் குறித்த உண்மையை, உலக ஆன்மிகத் தலைவர்கள் உலகிற்கு எடுத்துக்கூறவேண்டும் - அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி

மேரி தெரேசா: வத்திக்கான்

இரஷ்யாவின் கடுமையான தொடர் தாக்குதலை எதிர்கொண்டுவரும் உக்ரைன் நாட்டுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து இறைவேண்டல் செய்துவருவதற்காக, உக்ரைன் அரசுத்தலைவர் வொளாடுமிர் ஜெலன்ஸ்கி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் போர் தொடங்கி ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகியுள்ளவேளை, அந்நாட்டு மக்கள் அனைவரோடும் தன் தோழமையுணர்வை மீண்டும் வெளிப்படுத்துவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 12, இவ்வெள்ளியன்று, தொலைபேசி வழியாக தன்னோடு உரையாடியபோது, அவருக்கு நன்றி தெரிவித்ததாகக் கூறியுள்ளார், அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி.

இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதியன்று, இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமித்ததற்குப்பின்னர்,   உக்ரேனியர்கள் எதிர்கொண்டுவரும் கடுந்துயரங்கள் குறித்து இத்தொலைபேசி உரையாடலில் திருத்தந்தையிடம் எடுத்துரைத்த அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி அவர்கள், இவ்வுரையாடல் குறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளையும் பதிவுசெய்துள்ளார்.

உக்ரைன் நாட்டினருக்கு உலக ஆன்மிகத் தலைவர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது என்றும், அத்தலைவர்கள், அந்நாட்டிற்கு பகைவரால் இழைக்கப்படும் கொடூரமான செயல்கள் குறித்த உண்மையை உலகிற்கு எடுத்துக்கூறவேண்டும் என்றும் அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி அவர்கள் தன் டுவிட்டர் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், திருத்தந்தையோடு, அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி அவர்கள் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து, திருப்பீடத்திற்கான உக்ரைன் நாட்டுத் தூதர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைன் நாடும் மக்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தன் நாட்டிற்கு மகிழ்வோடு வரவேற்கின்றனர் எனவும், திருத்தந்தை கீவ் நகருக்கு வருவார் என்று தான் நம்புவதாகவும் பதிவுசெய்துள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,  அரசுத்தலைவர் ஜெலன்ஸ்கி அவர்களும் ஆகஸ்ட் 12, இவ்வெள்ளியன்று நடத்திய உரையாடல் தவிர, இவ்விருவரும் இவ்வாண்டு பிப்ரவரி 26ம் தேதி தொலைபேசி வழியாக உரையாடியுள்ளனர் என்பதும், மற்றொரு நாள் காணொளி வழியாகவும் பேசியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் பொது மறைக்கல்வியுரைகளுக்குப் பின்னும், ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைகளுக்குப் பின்னும், இன்னும், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் உக்ரைனில் அமைதி நிலவ விண்ணப்பித்து வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2022, 14:42