தேடுதல்

அமேசான் பூர்வீக இன மக்கள் சந்திப்பு அமேசான் பூர்வீக இன மக்கள் சந்திப்பு 

பூர்வீக இன மக்களோடு உண்மையான நல்லுணர்வு அவசியம்

1994ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, பூர்வீக இன மக்கள் உலக நாளை உருவாக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான்

பூர்வீக இன மக்களோடு உண்மையான நல்லுணர்வு கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பூர்வீக இனக் குழுக்கள் உலக நாளான ஆகஸ்ட் 09, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

பூர்வீகஇனமக்கள் (#PopoliIndigeni) என்ற ஹாஷ்டாக்குடன், இச்செவ்வாயன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “பூர்வீக இன மக்களோடு உண்மையான தோழமை, மற்றும், குழும உணர்வு கொண்டிருப்பது எவ்வளவு மகத்தானது! இளையோருக்கும், வயதுமுதிர்ந்தோருக்கும் இடையே நல்லதொரு பிணைப்பையும், படைப்பு முழுவதோடு ஒரு நலமான மற்றும், நல்லிணக்கம்நிறைந்த உறவையும் பேணி வளர்ப்பது, எவ்வளவு முக்கியமானது” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

பூர்வீக இனத்தவர் உலக நாள்

1994ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, பூர்வீக இனக் குழுக்கள் உலக நாளை உருவாக்கி, அந்த நாள், ஆகஸ்ட் 9ம் தேதி  சிறப்பிக்கப்படவேண்டும் என்று தீர்மானித்தது. 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஜெனீவாவில், பூர்வீக இன மக்களின் முதல் உலக மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“பாரம்பரிய அறிவைப் பாதுகாத்தல் மற்றும், அதனை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதில் பூர்வீக இனப் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில், ஆகஸ்ட் 9, இச்செவ்வாயன்று இவ்வுலக நாள் கொண்டாடப்பட்டது.

உலகில் 90 நாடுகளில், ஏறத்தாழ 47 கோடியே 60 இலட்சம் பூர்வீக இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்கும் குறைவே. இம்மக்கள், உலகில் பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில், பெருமளவு மொழிகளைப் பேசுகின்றனர், மற்றும், இவர்கள் 5,000 விதமான கலாச்சாரங்களையும் கொண்டிருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் யுனெஸ்கோ அமைப்பு, 2022ஆம் ஆண்டு முதல், 2032ஆம் ஆண்டு வரையில், பூர்வீக இன மொழிகள் பத்தாண்டுகள் என சிறப்பித்து வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2022, 16:00