குரோவேஷியாவில் பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு செபம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
Medjugorje அன்னை மரியா திருத்தலத்திற்கு, போலந்து நாட்டுத் திருப்பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தவர்கள் நிறையமைதியடையத் தான் இறைவனை வேண்டுவதாகவும், அவர்களின் குடும்பங்களோடு தன் அருகாமையைத் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 07, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின்னர் இவ்வாறு அத்திருப்பயணிகளை நினைவுகூர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
போஸ்னிய-எர்செகொவினா குடியரசிலுள்ள Medjugorje அன்னை மரியா திருத்தலத்திற்குச் சென்ற போலந்து திருப்பயணிகளின் பேருந்து ஒரு குழிக்குள் இறங்கி விபத்துக்குள்ளானதில், மூன்று அருள்பணியாளர்கள், ஆறு அருள்சகோதரிகள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
டுவிட்டர் செய்தி
மேலும், ஓர் உண்மையான உரையாடலின் முக்கியத்துவம், மற்றும், அதன் பலன்கள் குறித்து, ஆகஸ்ட் 08, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“உயிரோட்டமுள்ள ஓர் உரையாடல், வார்த்தைகளால் அல்ல, மாறாக அமைதியிலும், வலியுறுத்துவதில் அல்ல, ஆனால், மற்றவரின் போராட்டங்கள் மற்றும், அவர்களின் உள்ளத்தில் இருப்பவை பற்றி பொறுமையோடு செவிமடுக்க மீண்டும் தொடங்குவதிலும், இடம்பெறுகின்றது; இதயம் குணமடைதல், செவிமடுத்தலில் தொடங்குகின்றது” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்