தேடுதல்

ரிமினி கூட்டம் ரிமினி கூட்டம்  (Ph © Giorgio Salvatori //www.giorgiosalvatori.com)

திருத்தந்தை: உலகில் மனிதர் மீது பேரார்வம் பரவச்செய்யுங்கள்

1980ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தில் ரிமினி நகரில், ஒரு கருப்பொருளுடன், மக்கள் மத்தியில் நட்புறவை வளர்ப்பது குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

மக்கள் மத்தியில் நட்பை வளர்க்கவும், மனிதர் மீது பேரார்வத்தைப் பரப்பவும் மேற்கொள்ளப்படும் வழிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, கத்தோலிக்கருக்கு அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வட இத்தாலிய நகரமான ரிமினியில் ஆகஸ்ட் 20, இச்சனிக்கிழமை முதல், 25 வருகிற வியாழன் வரை நடைபெறும், மக்கள் மத்தியில் நட்புறவை வளர்ப்பது குறித்த 43வது கூட்டத்திற்கு, ஆகஸ்ட் 19, இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1980ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தில் ரிமினி நகரில், ஒரு கருப்பொருளுடன், மக்கள் மத்தியில் நட்புறவை வளர்ப்பது குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. “மனிதர் மீது பேரார்வம்” என்ற தலைப்பில் இவ்வாண்டு கூட்டம் நடைபெறுகிறது.

ஏராளமான மக்களைச் சந்தித்து, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்ற திருத்தூது ஆர்வத்தில் ரிமினி கூட்டத்தை நடத்துவதற்குத் தூண்டுகோலாய் இருந்த இறை ஊழியர் Luigi Guissani அவர்களின் நூறாம் ஆண்டு பிறப்பு, இவ்வாண்டு ரிமினி கூட்டத்தில் நினைவுகூரப்படுவதையும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொற்றின் கடும்விளைவுகளைச் சந்தித்துள்ளோர், போர், மற்றும் வன்முறைக்கு அஞ்சி புலம்பெயர்வோர், தனிமையை எதிர்கொள்வோர் போன்றோருக்கு உதவுகின்ற நல்ல சமாரியர்கள் அவசியம் என்பதை திருத்தந்தை அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவர் தனியாக வாழ்வுப் பயணத்தை மேற்கொள்ள இயலாது, எனவே அதற்கு சந்திப்பும், உடன்பிறந்த உணர்வும் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ள திருத்தந்தை, இக்கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களுக்கு தன் வாழ்த்தையும், ஆசிரையும் தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் நட்புறவை வளர்ப்பது குறித்த 43வது ரிமினி கூட்டத்திற்கு, திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ரிமினி ஆயர் Francesco Lambiasi அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2022, 15:03