தேடுதல்

பெய்ரூட் துறைமுகம் பெய்ரூட் துறைமுகம் 

பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தின் 2ம் ஆண்டு நினைவு

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 215க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மற்றும், 6,500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

லெபனோன் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகத்தில் பெரும் வெடிவிபத்து இடம்பெற்ற இரண்டாம் ஆண்டை, ஆகஸ்ட் 4, இவ்வியாழனன்று அந்நாட்டினர் நினைவுகூரும்வேளை, அதில் பலியானவர்கள் மற்றும், பாதிக்கப்பட்டோருக்காக, இப்புதனன்றும் இறைவேண்டல் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 03, இப்புதனன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் பொது மறைக்கல்வியுரையை ஆற்றியபின்னர், இவ்வெடிவிபத்து குறித்து நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் துயர்நிறைந்த இப்பெரும் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள், மற்றும், அன்புக்குரிய லெபனோன் மக்களை நினைத்துப் பார்க்கின்றேன் என்று கூறியுள்ளார்.

லெபனோனில், பல்வேறு மதங்களின் சமுதாயங்கள், உடன்பிறந்த உணர்வுடன் வாழக்கூடிய வகையில், அமைதி மற்றும், பன்முகத்தன்மைகொண்ட பூமியாக அந்நாட்டை அமைக்கவேண்டும் என்ற அழைப்பிற்குப் பிரமாணிக்கமாக  இருந்து,  பன்னாட்டு சமுதாயத்தின் உதவியால் மறுபிறப்புப் பாதையைத் தொடரவும்,  நாட்டில் ஒவ்வொருவரும் கடவுள் நம்பிக்கை, நீதி மற்றும், உண்மை ஆகியவற்றால்  ஆறுதலடையவும் வேண்டும் என்று திருத்தந்தை  கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பெய்ரூட் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட லெபனோன் மக்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2,50,000 யூரோக்களை அவசரகால உதவியாக அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 215க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 6,500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர், இன்னும், ஆலயங்கள், துறவு இல்லங்கள் உட்பட,  பல்லாயிரம் பேர் பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி, உழைத்துச் சேர்த்த சொத்துக்கள், வீடுகள் ஆகியவை சேதமடைந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2022, 13:27