திருத்தந்தை, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் Antonij சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை அலுவலகத்தின் வெளியுறவுத் துறை தலைவர் Volokolamskன் Antonij அவர்கள், ஆகஸ்ட் 05, இவ்வெள்ளி காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இரஷ்யா உக்ரைனை ஆக்ரமித்தபின்னர், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களின் பிரதிநிதி ஒருவர் திருத்தந்தையை சந்தித்தது இதுவே முதன்முறையாகும், இவ்வாண்டு மார்ச் மாதம் 16ம் தேதி, வத்திக்கானிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மாஸ்கோவிலிருந்து முதுபெரும்தந்தை கிரில் அவர்களும் இணயைதளம் வழியாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Volokolamskன் Antonij, பேராயர் காலகர்
மேலும், Antonij அவர்கள் ஆகஸ்ட் 4, இவ்வியாழன் மாலையில், வத்திக்கானில் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், உரோம் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே தற்போது நிலவும் உறவுகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் மாதத்தில் கஜகஸ்தான் நாட்டின் நூர்-சுல்தான் நகரில் நடைபெறும் உலக மற்றும், பாரம்பரிய மதங்களின் ஏழாவது மாநாட்டில் பங்குபெறுவது போன்றவை இடம்பெற்றன.
வருகிற செப்டம்பர் 14, மற்றும், 15ம் தேதிகளில் நடைபெறும் இம்மாநாட்டில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களும், நூர்-சுல்தான் நகரின் இசுலாம் பெரிய குரு Imam di al-Azhar Ahmed Mohamed Ahmed El-Tayeb அவர்களும், எருசலேமின் முதுபெரும்தந்தை 3ம் Theophilos அவர்களும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏறத்தாழ அறுபது நாடுகளின் இசுலாம், கிறிஸ்தவம், யூதம், ஷிண்டோயிசம், புத்தம், சௌராஷ்டிரம், இந்து மற்றும் ஏனைய மதங்களின் ஏறத்தாழ நூறு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
சந்திப்புக்கள்
மேலும், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லெயோநார்தோ சாந்த்ரி அவர்களும், போர்த்துக்கல் நாட்டு திருஅவைத் தலைவர் கர்தினால் மானுவேல் கிளமென்ட் அவர்களும், இவ்வெள்ளி காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினர்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்