தேடுதல்

இயேசு சபை அருள்பணியாளர் James Martin இயேசு சபை அருள்பணியாளர் James Martin  

மக்கள் பணியில் இயேசுவின் நெருக்கத்தைக் கொண்டிருப்போம்

"இடைவெளிகளைக் குறைத்து, நமது வேறுபாடுகளால் நம்மை வளமாக்கும் சந்திப்பு கலாச்சாரத்தில் தொடர்ந்து பணியாற்ற நான் உங்களை ஊக்குவிக்கிறேன்" : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எல்லா மக்களுடனும், இயேசு தன் உடனிருப்பை வெளிப்படுத்தியதுபோல, நீங்களும் பணியாற்றுங்கள் என்று, LGBT மக்களுக்கு மேய்ப்புப்பணியாற்றும் இயேசு சபை அருள்பணியாளர் James Martin அவர்களின் கடிதத்திற்கு அளித்துள்ள பதிலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு, தான் நடத்தவிருக்கும் சமூகப் பணி நிகழ்வு ஒன்றைக் குறித்து அருள்பணியாளர் Martin அவர்கள் திருத்தந்தைக்கு அனுப்பிய கடிதத்திற்கு அளித்துள்ள பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எல்லாரிடமும் தன்னை நெருக்கமாக்கிக் கொண்ட இயேசுவைப் போலவே, இடைவெளிகளைக் குறைத்து, நமது வேறுபாடுகளால் நம்மை வளமாக்கும் சந்திப்புக் கலாச்சாரத்தில் தொடர்ந்து பணியாற்ற நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்றும், தனிப்பட்ட சந்திப்புகளில் என்ன நிகழ்கிறது என்பதுதான் மிகவும் மதிப்புமிக்க விடயம் என்றும், அருள்பணியாளர் மார்டினுக்கு எழுதியுள்ள இந்தச் சுருக்கமான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உண்மையில், பெருந்தொற்று நம்மிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், மாற்று வழிகளைத் தேடவும் நமக்கு வழிகாட்டியுள்ளது என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தத் தடைகளை நாம் கடக்கும்போது, நம்மைப் பிரிப்பதைவிட நம்மை ஒன்றிணைக்கும் விடயங்களே அதிகம் என்பதை நாம் உணர்ந்துகொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திருப்பீடத்தின் சமூகத் தொடர்பு அவையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் மார்ட்டின் அவர்களுக்கு வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய கடிதத்தில், கடவுள், தான் அன்பு செய்யும் மக்களை  ஒருபோதும் கைவிடுவதில்லை என்றும், தனது பரிவிரக்கத்தால் அவர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கிறார் என்ற கடவுளின் பாணியைக் குறித்து அம்மக்களுக்குத் தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2022, 13:34