திருத்தந்தை: போர்களில் பலியாகுவோருக்காக இறைவேண்டல்
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைன், சிரியா, ஏமன், மற்றும், மியான்மார் நாடுகள் உட்பட உலகில் போர்களால் துயருறும் மக்களுக்காக அனைவரும் மன்றாடுமாறு, ஆகஸ்ட் 24, இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் முதுமை குறித்த பொது மறைக்கல்வியுரையை வழங்கியபின்னர், உக்ரைன் நாட்டில் ஆறு மாதங்களாக இடம்பெற்றுவரும் பயங்கரமான போரினால் துன்புறும் மக்களுக்கு அமைதி கிடைக்கச் செபிக்குமாறு திருப்பயணிகளிடம் கூறினார்.
போர், அறிவற்றது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, போரினால் உக்ரைனிலும், இரஷ்யாவிலும் யாருமின்றி கைவிடப்பட்டுள்ள பலரையும் நினைவுகூர்ந்தார்.
உக்ரைனில் குண்டுவீச்சுக்களால் தாக்கப்பட்டு, ஆபத்தான சூழலிலுள்ள Zaporizhia அணு மின் நிலையம் குறித்து கவலையுடன் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்நிலையம் அமைந்துள்ள பகுதி, பேரிடர்களால் மேலும் தாக்கப்படாதவாறு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாறு அழைப்புவிடுத்தார்.
அனைத்துப் போர்க் கைதிகளோடு, குறிப்பாக, மிக மோசமான நிலையிலுள்ள போர்க் கைதிகளோடு தனது உடனிருப்பைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கைதிகள் விடுதலை செய்யப்பட முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
மாஸ்கோவில் விபத்தில் பலியான இளம்பெண்
மாஸ்கோ நகருக்கு அருகில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ள இளம்பெண் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, அந்த வாகனத்தின் இருக்கைக்குக்கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் உயிரிழந்த அந்த இளம்பெண்ணை நினைவுகூர்வதாகவும், இவ்வாறு முட்டாள்தனமாக நடத்தப்படும் போருக்கு, அப்பாவி மக்கள் பலியாகின்றனர் எனவும் எடுத்துரைத்தார்.
ஆயுத வர்த்தகம்
ஆயுத வர்த்தகத்திலிருந்து இலாபம் ஈட்டுபவர்கள், மனித சமுதாயத்தைக் கொலைசெய்யும் குற்றவாளிகள் என்றுரைத்த திருத்தந்தை, சிரியா, ஏமன், மியான்மார் உட்பட உலகின் பல பகுதிகளில் இடம்பெறும் மறக்கப்பட்ட போர்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
சிரியாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற போரின் எதிர்விளைவுகள், ஏமனில் இடம்பெறும் போரால் பசியால் இறப்போர், அநீதியால் தங்களின் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் மியான்மாரின் Rohingya மக்கள் போன்றோரையும் குறிப்பிட்டு உலகில் அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.
மேலும், இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்குப் பின்னர், மங்கோலியாவின் முன்னாள் அரசுத்தலைவர் Nambar Enkhbayar அவர்களையும் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்