கியூபாவில் தீ விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
கியூபா நாட்டின் மடான்சாஸ் (Matanzas) பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கை, கடந்த வாரத்தில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் பலியானவர்கள், மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காக கடவுளின் இரக்கத்தை மன்றாடுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 05, கடந்த வெள்ளிக்கிழமையன்று, கியூபா நாட்டின் முக்கியமான எரிபொருள் கிடங்கின் முதல் உலை மின்னலால் தீப்பிடித்து எரிந்த பிறகு, ஆகஸ்ட் 6, சனிக்கிழமை காலையில் மேலும் இரண்டு உலைகள் பயங்கரமாகத் தீப்பிடித்து எரிய தொடங்கின. இவ்விபத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார், 121 பேர் வரை காயமடைந்துள்ளனர் மற்றும், இத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 17 தீயணைப்பு வீரர்கள் காணாமல் போயுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
இந்த பயங்கரமான தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரோடும் திருத்தந்தை ஆன்மிக அளவில் அருகிலிருப்பதை வெளிப்படுத்தும் தந்திச் செய்தியை, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கியூபாவின் ஆயர் பேரவை தலைவர் ஆயர் Emilio Aranguren Echeverría அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இத்தீ விபத்தில் பலியானவர்களின் ஆன்மாக்கள் நிறை அமைதியடையவும், இத்தீயை அணைப்பதற்கும், காணாமல் போயுள்ளவர்களைத் தேடும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுவரும் மீட்புப் பணியாளர்களுக்கு கடவுள் சக்தி தரும்படியாகவும் திருத்தந்தை செபிப்பதாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கியூபா அதிபர் Miguel Díaz-Canel அவர்கள், தனது வேண்டுகோளை ஏற்று, இந்த மிகப் பயங்கரமான தீ விபத்தைக் கட்டுப்படுத்த உதவிசெய்துள்ள மெக்சிகோ, வெனெசுவேலா, இரஷ்யா, நிக்கராகுவா, அர்ஜென்டீனா, சிலே ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்ப ரீதியாக ஆலோசனை வழங்கியுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்