தேடுதல்

வெள்ளத்தால் நிரம்பிய பாகிஸ்தான் வெள்ளத்தால் நிரம்பிய பாகிஸ்தான் 

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை செபம்

இந்த உலகம் முழுவதற்கும் மன்னிப்பு மற்றும், அமைதியைப் பெற்றுத்தருமாறு அன்னை மரியாவின் பரிந்துரையை இறைஞ்சுவோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

பாகிஸ்தானில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும், உக்ரைனில் போரினால் துன்புறும் மக்கள் ஆகிய அனைவருக்காகவும், ஆகஸ்ட் 28, இஞ்ஞாயிறன்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 28, இஞ்ஞாயிறன்று மத்திய இத்தாலிய நகரமான L'Aquilaவின், Collemaggio  அன்னை மரியா பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றியபின்னர் ஆற்றிய மூவேளை செப உரையில் இந்நாடுகளில் துயருறும் மக்களுக்காகச் செபித்த அதேவேளை, இந்நகரில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ள உதவிய அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பாதுகாப்புத் துறையினர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வீடுகள், மருத்துவமனைகள், சிறைகள் போன்ற இடங்களிலிருந்தும் இத்திருப்பலியில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, பாகிஸ்தானில் இடம்பெறும் கடுமையான வெள்ளத்தால் கட்டாயமாக வீடுகளைவிட்டு வெளியேறியிருப்போர், காயமுற்றோர், என எல்லாரோடும் தன் அருகாமையையும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு உலகளாவிய உதவிகள் தாராளமாக உடனடியாக கிடைக்கவேண்டும் எனவும், திருத்தந்தை ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த உலகம் முழுவதற்கும் மன்னிப்பு மற்றும், அமைதியைப் பெற்றுத்தருமாறு அன்னை மரியாவின் பரிந்துரையையும் இறைஞ்சிய திருத்தந்தை, நாடுகளின் தலைவர்களின் இதயங்களில், கிறிஸ்தவ, மற்றும், மனிதப் பண்புகளாகிய இரக்கம் மற்றும், கருணையை, அமைதியின் கடவுள், பிறக்கச்செய்வாராக என மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் வெள்ளத்தால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, அந்நாட்டு அரசு பன்னாட்டு உதவிக்கும் அழைப்புவிடுத்துள்ளது. இப்பேரிடரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும், இவ்வெண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2022, 14:34