தேடுதல்

இத்தாலியின் லோதி மறைமாவட்டத் திருப்பயணிகளுடன்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியின் லோதி மறைமாவட்டத் திருப்பயணிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 

லோதி மறைமாவட்ட திருப்பயணிகள் சந்திப்பு

இத்தாலியின் லோதி மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி Pozzoli, அர்ஜென்டீனாவில் தனக்கு திருமுழுக்கு அளித்த ஓர் உண்மையான சலேசியத் துறவி - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருஅவையின் வருங்காலம், இயேசு கிறிஸ்துவையும், அவரது நற்செய்தியையும் மகிழ்வோடு அறிவிக்கவேண்டியதைச் சார்ந்துள்ளது என்று இத்தாலியின் லோதி மறைமாவட்டத் திருப்பயணிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 26, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

இவ்வெள்ளி காலை 11.30 மணியளவில் வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், லோதி மறைமாவட்டத்தைச் சார்ந்த மேயர்கள், அரசு அதிகாரிகள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் என 360 பேரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்கள் இந்நாளில் தன்னை சந்திக்க வந்ததன் முக்கிய நோக்கங்களை எடுத்துரைத்தார்.

இச்சந்திப்பிற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும், முதலில் தனக்கும் இத்திருப்பயணிகளுக்கும் இடையே திருமுழுக்கு உறவு இருக்கின்றது என்றுரைத்து,  அர்ஜென்டீனாவுக்கு ஆர்வத்தோடு வந்து மறைப்பணியாற்றிய லோதி மறைமாவட்டத்தைச் சேர்ந்த சலேசிய சபையின் அருள்பணி Enrico Pozzoli அவர்களே, தனக்கு திருமுழுக்கு அளித்தார் எனவும், தனது அருள்பணித்துவ அழைப்பை தனது பெற்றோர் ஏற்பதற்கு அவர் உதவினார் எனவும் கூறியுள்ளார்.

லோதி மறைமாவட்டத்திலுள்ள Sant'Angelo Lodigiano என்ற ஊரைச் சேர்ந்த மாபெரும் புனிதர் பிரான்செஸ்கோ சவேரியோ கபிரினி அவர்களே, Codognoவின் இயேசுவின் திருஇதய மறைப்பணியாளர்கள் சபையை ஆரம்பித்தவர் மற்றும், இப்புனிதரே புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் என்று பாராட்டிப் பேசிய திருத்தந்தை, தானும் அர்ஜென்டீனாவில் புலம்பெயர்ந்தோரின் மகன் என்பதைக் குறிப்பிட்டார்.

லோதி மறைமாவட்ட அருள் சகோதரிகளுடன் திருத்தந்தை
லோதி மறைமாவட்ட அருள் சகோதரிகளுடன் திருத்தந்தை

அருள்பணி Pozzoli, குறிப்பாக, புனித கபிரினி அவர்கள், பிறரன்புச் செயல்கள், மற்றும், உண்மைக்குச் சான்று பகரும் தூய வாழ்வு வழியாகவே நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, தொடர்ந்து மாறிவரும் இன்றைய உலகில், புதிய பாதைகள், புதிய முறைகள், புதிய மொழிகள் ஆகியவற்றைத் தேடவேண்டியுள்ளது, ஆயினும், நற்செய்தியால் வடிவமைக்கப்பட்ட சான்று வாழ்வே, நாம் தேடவேண்டிய உயர்ந்த பாதை என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் இப்பாதையை நமக்குக் காட்டியுள்ளது என்றும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மனமாற்றம் மறைப்பணிக்குத் தேவைப்படுகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, உலகளாவியத் திருஅவையில் இடம்பெற்றுவரும், ஒன்றிணைந்த பயணம் என்ற தயாரிப்பு நடவடிக்கையில், லோதி மறைமாவட்டம் இரு கூட்டங்களை முடித்து மூன்றாவது கூட்டத்தைத் தொடங்கவுள்ளது குறித்துப் பாராட்டினார். 

லோதி மறைமாவட்டத் திருப்பயணிகள் இன்று தன்னைச் சந்தித்ததன் மூன்றாவது முக்கிய காரணமாக, கோவிட்-19 பெருந்தொற்று பரவத்தொடங்கிய முதல்நிலையில், லோதிப் பகுதியே ஐரோப்பாவில் முதல் சிவப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, லோதி மக்கள், கடினமான சோதனைகளுக்குப்பின் தங்கள் வாழ்வை ஒன்றிணைந்து மீண்டும் விறுவிறுப்பாகத் தொடங்கவுள்ளதை இச்சந்திப்பு சுட்டிக்காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார். 

இருபது ஆண்டுகளுக்குமுன் லோதி மறைமாவட்டத்திற்கு திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டதையும், அப்பகுதியில் முதலில் நற்செய்தி அறிவித்த புனித ஆயர் Bassianusக்கும், மூன்றாம் மில்லென்யத்திற்கு திருஅவையைக் கொணர்ந்த இத்திருத்தந்தைக்கும் இடையேயுள்ள இணைப்பையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவையும், அவரது நற்செய்தியையும் மகிழ்வோடு அறிவித்தல் என்ற முக்கிய அம்சத்திலேயே இவ்விரு தந்தையரும் சந்திக்கமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலகம் மாறுகின்றது, கிறிஸ்துவோ அவரது நற்செய்தியோ மாறுவதில்லை, திருஅவையின் வருங்காலம், இவ்விரு முக்கிய கூறுகளுக்குச் செல்வதில் அடங்கியுள்ளது என உரைத்து அத்திருப்பயணிகளை ஆசிர்வதித்து தன் உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2022, 15:34