திருத்தந்தை: இயேசு இளையோரின் மிகப்பெரும் நண்பராக இருப்பாராக!
மேரி தெரேசா: வத்திக்கான்
இளையோர், இயேசுவை தங்களின் வாழ்வுப் பயணம் முழுவதிலும் மாபெரும் நண்பராகவும், உடனிருப்பவராகவும் கொண்டிருக்கவேண்டும் என்ற தன் ஆவலை, ஐரோப்பிய இளையோர் குழு ஒன்றிடம், இவ்வெள்ளியன்று தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியில், “Alpha Camp” என்ற இளையோர் பயிற்சி முகாமில் பங்குபெறும் இத்தாலி மற்றும், ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இளையோர், பயிற்சியாளர்கள், ஆன்மிக வழிநடத்துனர்கள் என 350 பேரை, ஆகஸ்ட் 05, இவ்வெள்ளி நண்பகலில், வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
யோர்தான் நதிக்கரையில் தான் சந்தித்த முதல் சீடர்களிடம் “என்ன தேடுகிறீர்கள்?” (யோவா.1:38) என இயேசு கேட்ட கேள்வியை மையப்படுத்தி தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, புனிதக் கூறுகளைக் கொண்டிராத, அதேநேரம் உலகப்போக்கை அதிகமாகக் கொண்டிருக்கும் ஒரு கலாச்சார உலகில் பிறந்திருக்கின்ற உங்களில், மனிதரின் உள்ளாழத்தில் எக்காலத்திலும் எழக்கூடிய கேள்விகள் எழலாம் என்று கூறியுள்ளார்.
நம் வாழ்வுக்கு அர்த்தம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? வாழ்வின் தொடக்கம் என்ன? உலகில் குற்றமற்றவர்கள் துன்புறுவது ஏன்? போன்று உங்களில் எழுகின்ற கேள்விகளை, இயேசு விரும்புகிறார், அதற்கும் மேலாக, அவற்றுக்கு அவர் பதிலளிக்க விரும்புகிறார் என உரைத்துள்ள திருத்தந்தை, கடந்த வாரத்தில் கனடாவில் தான் சந்தித்த பூர்வீக இனக் குழுக்களின் இளையோர் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
உங்களைப் போன்ற உணர்வுகளையே அந்த இளையோரும் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, நாம் எல்லாரும் ஏங்குகின்ற வாழ்வின் அர்த்தம், முழு நிறைவு, மகிழ்வு ஆகிய அனைத்துமாக இருப்பவர் இயேசு கிறிஸ்துவே என்றும், அவர், உங்களில் உங்களோடு வாழ்கிறார், அவர் உங்களை அழைக்கிறார், தம்மிடம் நீங்கள் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறார் என்றும், நம்மை நாம் அன்புகூர்வதைவிட அவர் நம்மை அன்புகூர்கிறார் என்றும் இளையோரிடம் கூறியுள்ளார்.
நான் 17 வயதை எட்டியபோது, அருள்பணித்துவ வாழ்வுக்கு இயேசு என்னை அழைத்ததைக் கேட்டேன், இணையதள பிள்ளைகளாகிய உங்களுக்கும் இது நடைபெறும் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, இயேசு, ஆல்ஃபா மர்றும் ஒமேகாவாக, தொடக்கமும், முடிவுமாக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இளையோரே, உங்களது முகாமும் “ஆல்ஃபா” என அழைக்கப்படுகின்றது என்றும், ஆல்ஃபாவிற்கு, பிறப்பு, புதிய தொடக்கம், புதிய வாழ்வின் விடியல் என்ற சொற்களும் உள்ளன என்றும், “ஒமேகா” என்பதற்கு, இறுதி, முடிவு, நிறைவு ஆகிய சொற்கள் உள்ளன என்றும் கூறியுள்ள திருத்தந்தை, நீங்கள் இயேசுவோடு ஒன்றித்திருக்கும்போது ஒவ்வொருவரும் மலர்ந்து கனிதரும் விதையாக மாறுகிறீர்கள் என்று எடுத்துரைத்துள்ளார்.
இங்கிலாந்தில் பிறந்து இத்தாலியில் வளர்ந்த இளம் அருளாளர் கார்லோ அக்கூட்டிஸ் அவர்களின் வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறும் இளையோரைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இயேசுவோடு எப்போதும் நெருக்கமாக வாழுமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
மத்திய இத்தாலியில் ஜூலை 31ம் தேதி தொடங்கிய ஆல்ஃபா இளையோர் முகாம், ஆகஸ்ட் 7, வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இம்முகாமில் 15 வயது முதல் 30 வயது வரையுள்ளவர்கள் பங்கு பெறுகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்