கொரிய மக்கள் அனைவருக்கும் திருத்தந்தை ஆசிர்
மேரி தெரேசா: வத்திக்கான்
வட மற்றும், தென் கொரிய மக்கள் என அனைவரோடும், அந்நாடுகளின் கிறிஸ்தவர், மற்றும், கிறிஸ்தவர் அல்லாதவர் என எல்லாரோடும் ஆண்டவர் இருப்பாராக, அவர்களை அவர் நிறைவாக ஆசிர்வதித்து அமைதி என்னும் கொடையை நல்குவாராக என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் பதிவுசெய்யப்பட்ட பேட்டி ஒன்றில், கொரிய மக்கள் மீதுள்ள தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
திருத்தந்தை வழங்கியுள்ள இப்பேட்டி, தென் கொரிய தேசிய தொலைக்காட்சியின் முக்கிய KBS அலைவரிசையில் ஆகஸ்ட் 26 இவ்வெள்ளியன்று முக்கியமான நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது.
திருப்பீடத்தின் அருள்பணியாளர் பேராயத்தின் தலைவரான, தென் கொரியாவின் Daejeon முன்னாள் பேராயர் Lazarus You Heung-sik அவர்கள், ஆகஸ்ட் 27, இச்சனிக்கிழமையன்று கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படும்வேளை, திருத்தந்தை வழங்கியுள்ள இந்த அரை மணி நேர பேட்டி ஒளிபரப்பப்பட்டுள்ளதை, தென் கொரிய கத்தோலிக்க சமுதாயம் மிகவும் வரவேற்றுள்ளது என ஆசியச் செய்தி கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள், உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ அவர் விடுத்த அழைப்பு போன்ற நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களுடன் அவரது பேட்டி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் திருத்தந்தை தென் கொரியாவுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் போன்று வட கொரியாவின் Pyongyang நகருக்கும் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்து, ஆகஸ்ட் 24, இப்புதனன்று KBS அலைவரிசை ஒளிபரப்பாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, அந்நாட்டின் அழைப்புக்காக காத்திருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
அழைப்பிதழ் வந்தால் வட கொரியாவுக்குச் செல்வேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, நான் அனைத்து மக்களுக்கும் சகோதரர், உடன்பிறந்த உண்ரவு நிலையே, எனது திருத்தூதுப் பயணங்களின் நோக்கமாக எப்போதும் இருக்கின்றது எனவும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அனைவரையும், அனைத்தையும், சகோதரர் சகோதரிகள் என்றே அழைத்தார் எனவும், உடன்பிறந்த உணர்வுநிலை இல்லாததாலே போர் நடைபெறுகின்றது எனவும் கூறியுள்ளார்.
உக்ரைனில் இடம்பெறும் போர் குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை, ஒரு நூற்றாண்டுக்குள் நாம் மூன்றாம் உலகப் போரில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இதற்கு மிக முக்கியமான காரணம் ஆயுத உற்பத்தியே, ஓராண்டுக்கு இது நிறுத்தப்பட்டால், அப்பணத்தைக்கொண்டு பசிக்கொடுமை, கல்வியின்மை போன்ற பிரச்சனைகளைத் தீர்த்துவிடலாம் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
கொரிய மக்கள் போரினால் துன்புற்றுள்ளவர்கள், எனவே அவர்கள் அமைதிக்காக உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தென் கொரியாவிலிருந்து இறையழைத்தல் அதிகம் வருவதால், அருள்பணியாளர்கள் மற்ற நாடுகளுக்கும் சென்று பணியாற்றவேண்டும் எனவும் கூறியுள்ளார். (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்