தேடுதல்

விசுவாசிகளை சந்திக்கும் திருத்தந்தை விசுவாசிகளை சந்திக்கும் திருத்தந்தை  

திறந்த மனம் கொண்டிருப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

"திறந்த மனம் கொண்ட ஏழைகள் எப்போதும் மகிழ்ந்திருக்கிறார்கள்" : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போதும் என்ற மனம் கொண்டவர்களும், தங்களிடம் இருப்பதில் நிறைவு காண்பவர்களும் எப்போதும் மகிழ்ந்திருக்கிறார்கள் என்று ஆகஸ்ட் 11, இவ்வியாழனன்று தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களைப் பணக்காரர்களாகவும், வெற்றியாளர்களாகவும், பாதுகாப்பாக இருப்பவர்களாகவும் நினைப்பவர்கள், எல்லாவற்றையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக எண்ணிக்கொண்டு கடவுளிடமிருந்தும், தங்களைச் சுற்றியுள்ள சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக் கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆனால் அதேவேளையில், தாங்கள் மிகவும் ஏழைகள் என்றும்,  தங்களிடம் இருப்பது போதுமானதாக இல்லை என்றும் கருதுபவர்கள், கடவுளுக்கும், தங்கள் அருகில் இருப்போருக்கும் எப்போதும் திறந்த மனம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்படிப்பட்ட ஏழை மக்களே உண்மையான மகிழ்வைக் கண்டடைகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மூன்றாம் பாலினக் குழு சந்திப்பு

மேலும், ஆகஸ்ட் 10, இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், பொது மறைக்கல்வியுரையை ஆற்றியபின்னர், அவ்வரங்கத்தில் மூன்றாம் பாலினக் குழு ஒன்றையும் சந்தித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் Torvaianica பங்குத்தந்தை அருள்பணி Andrea Conocchia, இயேசுவின் சிறிய சகோதரிகள் சபையின் அருள்சகோதரி Geneviève Jeanningros ஆகிய இருவரின் தலைமையில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மூன்றாம் பாலினக் குழுவினரைச் சந்தித்து அவர்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வையும் திருத்தந்தை தெரிவித்தார்.

அப்பங்குத்தளத்தின் அமலமரி குழுமத்தால் ஆதரிக்கப்படும் இக்குழுவினரை திருத்தந்தை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருள்பணி Andrea Conocchia அவர்கள், கற்பனைசெய்ய இயலாத வகையில் பெருந்துன்பங்களோடு வாழ்கின்ற மக்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிறார் என்பதை, இச்சந்திப்பில் உணர முடிந்தது என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இவ்வாண்டு ஏப்ரல் 27, ஜூன் 22, ஆகஸ்ட் 3 ஆகிய தேதிகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றாம் பாலினத்தவர் சிலரைச் சந்தித்துள்ளார் என்று, வத்திக்கானின் லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழ் பதிவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2022, 13:53