தேடுதல்

திருத்தந்தை: முதுமை, கிறிஸ்துவுக்குச் சான்றுபகரும் பலனுள்ள காலம்

வயதுமுதிர்ந்தோர் தங்களின் முதுமை காலத்தில் கிறிஸ்துவின் வாக்குறுதிகளில் அமைந்த மனதோடு நம்பிக்கை வைப்பதன் வழியாக, அவர்கள் நற்செய்திக்கு பலனுள்ள சாட்சிகளாகத் திகழமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளால் கடந்த இரு ஆண்டுகளாக, உரோம் நகருக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள், மற்றும் திருப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தவேளை, கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாது தற்போது இப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆகஸ்ட் 10, இப்புதன் உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கிய பொது மறைக்கல்வியுரையைக் கேட்டு ஆசிர் பெறுவதற்காக, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் ஏராளமான திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு, நான் போய் உங்களுக்கு ஓர் இடம் ஏற்பாடு செய்கிறேன் (காண்க.யோவா.14,2) என்றுரைத்துள்ள இயேசுவின் திருச்சொற்களை மையப்படுத்தி, முதுமை பற்றிய தனது புதன் மறைக்கல்வித் தொடரின் 16வது பகுதியை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்” (யோவா.14,1-3)

புதன் மறைக்கல்வியுரை

அன்புள்ள சகோதரர், சகோதரிகளே, நாம் இன்று முதுமை குறித்த இறுதி மறைக்கல்விப் பகுதியில் இருக்கின்றோம். இயேசு, தம்மைப் பின்செல்பவர்களுக்கு வழங்கிய, உள்ளத்தை உருக்குகின்ற இறுதி பிரியாவிடைப் பகுதி குறித்து இன்று சிந்திப்போம். இயேசு இறுதி இராவுணவின்போது தம் சீடர்களுக்கு ஆற்றிய பிரியாவிடை உரை யோவான் நற்செய்தியில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. “உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்” (யோவா.14:1), “நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன், திரும்பி வருவேன் மற்றும், நான் இருக்கும் இடத்திலேயே உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்” (யோவா.14:3) என்ற ஆறுதலளிக்கின்ற மற்றும், வாக்குறுதியளிக்கின்ற வார்த்தைகளோடு இயேசுவின் பிரியாவிடை உரை தொடங்குகிறது. மேலும், இவ்வுரையை ஆற்றுவதற்கு முன்பாக, இயேசு பேதுருவிடம், அவர் தனது பலவீனமான நம்பிக்கையைக் கடந்துவரவேண்டும் என்பதை நினைவுபடுத்தி “பின்னரே என்னைப் பின்தொடர்வாய்” (யோவா.13:36) என அவரிடம் கூறியுள்ளார். இவ்வாறு நம் ஆண்டவர், தம் மரணம் நெருங்கிவந்தவேளையில், இறைத்தந்தை வாழும் உறைவிடத்தில் அவர்களுக்காக இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன் என்ற உறுதியையும் சீடர்களுக்கு அளித்தார். மேலும் அவர் தம் சீடர்களை நம்பிக்கையில் உறுதியாயிருக்குமாறு ஊக்கப்படுத்தினார்.  கிறிஸ்துவின் முதல் சீடர்களைப் போன்று, எல்லாக் காலங்களிலும் அவரைப் பின்பற்றி வாழ்கின்ற அனைவரும், அவரின் வாக்குறுதி நிறைவேறும் என்ற மகிழ்வான எதிர்நோக்கில் வாழ்கின்றனர். முதுமைக் காலம், நற்செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ள நம்பிக்கைச் செய்திக்குச் சான்று பகரும் சிறப்பான பலனுள்ள காலமாக இருக்கமுடியும். இவ்வுலக வாழ்வு, மிகப்பெரும் மகத்தான ஏதோ ஒன்றிற்காக, அதாவது விண்ணக எருசலேமில் நம் ஆண்டவர், மற்றும், அனைத்துப் புனிதர்களின் தோழமையில் நித்திய வாழ்வின் மகிழ்வில் திளைப்பதற்குத் தயாரிப்பதாக, அதனை அர்த்தமுள்ள வகையில் வாழவேண்டும் என்பதை, வயதுமுதிர்ந்தோர் கிறிஸ்துவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதன் வழியாக நமக்கு எடுத்துக்காட்ட முடியும். இவ்வாறு, நம் வாழ்வில் ஆண்டுகள் கடப்பது, ஓர் அச்சுறுத்தலாக இல்லாமல், ஓர் ஆசிர்வாதமாக மாறும். மேலும் அது, வாழ்வு, அதன் எல்லா நிலைகளிலும், கடவுள் தம் அன்புப் பிள்ளைகளுக்கு வழங்குகின்ற அருள்கொடையின் நிறைவுக்கு இட்டுச்செல்லும் நற்செய்திக்கு ஒரு சான்றாகவும் மாறும்.

புதன் மறைக்கல்வியுரை 100822
புதன் மறைக்கல்வியுரை 100822

இவ்வாறு முதுமையின் மதிப்பு மற்றும் அர்த்தம் குறித்த தன் புதன் பொது மறைக்கல்வித் தொடரை, ஆகஸ்ட் 10, இப்புதன் காலையில் நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போரால் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்காகவும், கியூபாவில் எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும் இறைவனை வேண்டினார். பின்னர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும் அமைதியும் அனைவர் மீதும் பொழியப்பட செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2022, 13:04