அரசியல் வாழ்வின் புளிக்காரமாக செயல்பட அழைப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
நீதி, உடன்பிறந்த உணர்வு நிலை, அமைதி போன்றவற்றைக் கொண்டு அரசியல் அன்பின் சாட்சியாக, மற்றும் அரசியல் வாழ்வின் புளிக்காரமாகச் செயல்படுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்துலக கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 25, வியாழனன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் அனைத்துலக கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை, மோதல்கள் மற்றும் பிளவுகளால் புவிசார் அரசியல் சூழல் பாதிப்படைந்து கொண்டிருக்கும் நிலையில் அமைதி, நீதியைக் கருப்பொருளாகக் கொண்டு நடைபெறும் இக்கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், நீதி, உடன்பிறந்த உணர்வு நிலை, அமைதி போன்ற மூன்று கருத்துக்களின் அடிப்படையில் அவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துயர்களை எதிர்கொள்ளும் மக்களின் தனித்தன்மையானது, இன்றைய புறக்கணிப்புக் கலாச்சாரத்தினால் பாதிக்கப்படாதவாறு அவர்கள் ஒவ்வொருவரும் மரியாதையுடனும் அன்புடனும் நடத்தப்பட உழைக்கவேண்டியது தலைவர்களின் சவாலான கடமை என்றும் எடுத்துரைத்தார்.
உடன்பிறந்த உணர்வின்றி சமூகம் இல்லை எனவும், சேவை செய்வதைவிட வன்முறையே பெரிது என்று எண்ணும் மனிதர்முன் பொறுப்புள்ள குடிமக்களாக மட்டுமன்றி, தேவையில் இருக்கும் மக்களின் அன்பினால் ஈர்க்கப்பட்ட திறமையான தலைவர்களாக இருப்பதும் முக்கியமானது எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
பொதுவான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் முயற்சி என்பது அமைதிக்கான தொடர் தேடலை எதிர்பார்க்கிறது என்றும், போரில்லாதது மட்டும் அமைதியல்ல, ஒருங்கிணைந்து செயல்படுதல், அனைவருக்கும் நன்மைதரும் இலக்கை அடைதல், கலந்துரையாடல் போன்றவற்றில் அடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
பொது மற்றும் அரசியல் வாழ்வின் புளிக்காரமாகச் செயல்பட, அரசியல் அன்பு கொண்டு வாழ அனைவரையும் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையரசை இவ்வுலகில் கொண்டு வர உழைக்கும் அனைவருக்கும் தன்னுடைய பாராட்டினையும், அவர்களது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆசிரையும் வழங்கியதுடன் தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுகொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்