தேடுதல்

L'Aquilaவில் செலஸ்டின் மன்னிப்பின் புனிதக் கதவு திறப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஆகஸ்ட் 28, இஞ்ஞாயிறன்று, மத்திய இத்தாலியின் L'Aquila நகரின், Collemaggio  அன்னை மரியா பசிலிக்கா வளாகத்தில் மூவேளை செப உரையாற்றியபின்னர், அப்பசிலிக்காவின் புனிதக் கதவையும் திறந்து வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

L'Aquila நகரில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 28, 29 ஆகிய இரு தேதிகளில் சிறப்பிக்கப்படும் நிறைபேறு பலன்கள் பெறும் செலஸ்டின் மன்னிப்பு என்ற நிகழ்வின் தொடக்கமாக, Collemaggio அன்னை மரியா பசிலிக்காவின் புனிதக் கதவு திறக்கப்படும் வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய தந்தையே இறைவா, புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணம் மற்றும், உறுதியான நம்பிக்கையோடு இப்புனிதக் கதவு வழியாகச் செல்பவர்கள், உம்மிடமிருந்து வருகின்ற மீட்பைக் கண்டடைவார்களாக மற்றும், உம்மிடமே எம்மை அழைத்துச் செல்வீராக என திருத்தந்தை, இப்புனிதக் கதவைத் திறப்பதற்குமுன் செபித்தார்.

திருத்தந்தை புனித 5ம் செல்ஸ்டின்

1294ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி, Collemaggio அன்னை மரியா பசிலிக்காவில் திருத்தந்தையாக முடிசூட்டப்பட்ட திருத்தந்தை புனித 5ம் செலஸ்டின் அவர்கள் தலைமைப்பணியேற்றவுடனேயே, இப்பசிலிக்காவின் புனிதக் கதவு வழியாகச் செல்பவர்களுக்கு நிறைபேறு பலன்கள் உண்டு என்ற, Inter sanctorum solemnia எனப்படும் "மன்னிப்பு அறிக்கை" ஒன்றை வெளியிட்டார். அதுவே ஒவ்வோர் ஆண்டும் L'Aquila நகரில், ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் செலஸ்டின் மன்னிப்பு என்ற பெயரில் சிறப்பிக்கப்படுகின்றது. அப்பசிலிக்காவில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் திருப்புகழ்மாலை வழிபாட்டிலிருந்து ஆகஸ்ட் 29ம் தேதி வரை இப்புனிதக் கதவு வழியாகச் செல்பவர்களுக்கு நிறைபேறு பலன்கள் உண்டு. இப்பலன்களைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருளடையாளம் பெற்று, திருப்பலியில் பங்குகொண்டு, திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிக்கவேண்டும்.

புனிதக் கதவைத் திறப்பதற்குமுன் செபிக்கும் திருத்தந்தை
புனிதக் கதவைத் திறப்பதற்குமுன் செபிக்கும் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒலிவ மரத் தடியால் இந்த புனிதக் கதவை மூன்று தடவைகள் தட்டியதும் அக்கதவு திறக்கப்பட்டது.

அப்புனிதக் கதவு வழியாக பசிலிக்காவுக்குள் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை புனித 5ம் செலஸ்டின் அவர்களின் கல்லறையில் சிறிதுநேரம் செபித்தார். பின்னர் அப்பசிலிக்காவுக்குள் கத்தோலிக்கரையும் சந்தித்து உரையாற்றினார்.

நிறைபேறு பலன்கள் ஓராண்டுக்கு நீட்டிப்பு

மேலும், அப்பசிலிக்காவில் புனிதக் கதவு வழியாகச் செல்பவர்களுக்கு கிடைக்கும் நிறைபேறு பலன்கள் பெறும் சலுகையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார் என்று, L'Aquila நகர் துணை ஆயர் Antonio D’Angelo அவர்கள் அறிவித்துள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2022, 18:15