Medjugorje இளையோர் விழாவிற்கு திருத்தந்தை செய்தி
மேரி தெரேசா: வத்திக்கான்
அன்பு இளையோரே, உங்கள் இதயத்தை அழுத்தும் அனைத்துச் சுமைகளோடும் இயேசுவிடம் செல்வதற்கு அஞ்சவேண்டாம் என்று, Medjugorje நகரில் நடைபெறும் இளையோர் விழாவிற்கு அனுப்பியுள்ள செய்தியில், இளையோரை ஊக்கப்படுத்திள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 01, இத்திங்கள் முதல், 6 வருகிற சனிக்கிழமை வரை, போஸ்னியா மற்றும், எர்செகொவினா நாட்டின், Medjugorje நகரில் நடைபெறும் இளையோர் விழாவில் பங்குபெறும் அனைவருக்கும் திருத்தந்தை அனுப்பிய செய்தி, இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் ஆகஸ்ட் 1 இத்திங்களன்று வாசிக்கப்பட்டது.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” (மத்.11:28-30) என்று இயேசு அக்காலத்தில் கூறியது, இக்காலத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் அவர் கூறுகிறார் என்று, தன் செய்தியைத் தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
"என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், மற்றும், உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" என்ற தலைப்பில் இவ்விளையோர் விழா நடைபெறுவதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஏமாற்றங்கள், கடந்தகாலக் காயங்கள், தாங்கிக்கொள்ளும் அநீதிகள், எண்ணற்ற நிச்சயமற்ற கூறுகள், கவலைகள் என நம் இதயங்களை பல காரியங்கள் அழுத்துகின்றன, அவற்றோடு இயேசுவிடம் செல்வோம் எனவும் கூறியுள்ளார்.
இயேசு குறிப்பிடும் "நுகம்" என்பது, நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் (யோவா.15:12). என்று இயேசு தம் சீடர்களுக்கு விட்டுச்சென்ற அன்புக் கட்டளையாகும் என்றுரைத்த திருத்தந்தை, மற்றவர் மீது சுமைகளைத் திணிக்காத இயேசுவோடு நடந்து, அவரிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று இளையோரிடம் கூறியுள்ளார்.
மனிதரின் காயங்களுக்கு உண்மையான மருந்து, உடன்பிறந்த உணர்வு வாழ்வில் உள்ளது எனவும், உண்மையான மன அமைதியை நல்குபவர் ஆண்டவர் ஒருவரே, எனவே அவரிடம் செல்வதற்கு, அவரின் அன்னையாம் மரியாவின் உதவியை நாடுங்கள் எனவும் இளையோரிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்விளையோருக்கு தன் ஆசிரை அளித்து செய்தியை நிறைவுசெய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்