வத்திக்கானில் ‘Vitae’ முதல் உச்சி மாநாடு
மேரி தெரேசா: வத்திக்கான்
பொது நலனுக்குப் பயன்படும் முறையில், ஒரு கலாச்சார மாற்றம் இடம்பெறுவதற்கு உதவும்வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்கேற்புடன், உலகில் புகழ்பெற்ற கலைஞர்களைக் கொண்டு, உலகளாவிய ‘Vitae’ அமைப்பு இம்மாத இறுதியில் வத்திக்கானில் முதல் உச்சி மாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
பல்வேறு பன்னாட்டு கலைஞர்கள், சட்டத்துறையினர், மற்றும் தலைவர்களைக் கொண்ட Vitae உலகளாவிய அரசு-சாரா அமைப்பு, கலைகள், ஊடகம், பொழுதுபோக்கு ஆகியவை வழியாக, மக்கள் மத்தியில் குணப்படுத்தலையும், நம்பிக்கை மற்றும், அழகின் சந்திப்புக்களையும் பேணி வளர்க்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த உலகளாவிய Vitae அமைப்பு, இம்மாதம் 31, செப்டம்பர் 1 ஆகிய இரு நாள்களில் வத்திக்கானின் 4ம் பியோ மாளிகையில், Vitae’ முதல் உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
இஸ்பெயின் நாட்டு அரசி சோஃபியா அவர்களின் ஆதரவுடன் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின் ஒரு நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக, திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் அறிவித்துள்ளது.
பொது நலன், உலகளாவிய மதிப்பீடுகள், மக்களுக்கு இடையே சந்திப்புகள் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும்வண்ணம், கலைகள், ஊடகம், மற்றும், பொழுதுபோக்கு ஆகிய துறைகளின் வல்லுநர்கள், கலாச்சாரத்தில் எவ்வாறு ஒரு மாற்றத்தைத் தூண்டியெழுப்ப முடியும் என்பது குறித்து இம்மாநாட்டில் கலந்துரையாடுவார்கள் எனவும், அத்தொடர்பகம் கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்