தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ்,. ஆயர் Antonio Staglianò (09.06.2021) திருத்தந்தை பிரான்சிஸ்,. ஆயர் Antonio Staglianò (09.06.2021) 

பாப்பிறை இறையியல் கழகத்தின் புதிய தலைவர் ஆயர் Staglianò

ஆயர் Antonio Staglianò அவர்கள், 2009ஆம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் Noto ஆயராக நியமிக்கப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான்

பாப்பிறை இறையியல் கழகத்தின் தலைவராக, இத்தாலிய ஆயர் Antonio Staglianò அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 06, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

இத்தாலியின் Noto மறைமாவட்ட மேய்ப்பராக இந்நாள்வரை பணியாற்றிய ஆயர் Antonio Staglianò அவர்கள், 1959ஆம் ஆண்டில் Isola Capo தீவில் பிறந்தார். 1984ஆம் ஆண்டில் Crotone-Santa Severina உயர்மறைமாவட்டத்திற்கென அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

ஜெர்மனியில் இறையியல் கல்வியைக் கற்றுள்ள ஆயர் Antonio Staglianò அவர்கள், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப்பட்டமும், Cosenza அரசு பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருப்பவர்.

இவர், 2009ஆம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் Noto ஆயராக நியமிக்கப்பட்டார்.

Altagracia திருத்தல நிகழ்வு

மேலும், தொமினிக்கன் குடியரசின் Altagracia அதாவது அருள்மிகப்பெற்ற அன்னை மரியா திருத்தலத்தில் அவ்வன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூறாம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டத்தில் தனது பிரதிநிதியாக கலந்துகொள்வதற்கு, பேராயர் Edgar Peña Parra அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 15ம் தேதி நடைபெறும் அவ்விழாவில், திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச் செயலர் பேராயர் Parra அவர்களின் தலைமையில், மேலும் இருவரும் பங்குபெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2022, 16:07