தேடுதல்

திருத்தந்தை: தானியக் கப்பல் வெளியேறியிருப்பது குறித்து மகிழ்ச்சி

ஐ.நா., துருக்கி ஆகிய இரண்டும், இரஷ்யா மற்றும், உக்ரைனோடு பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக, தானியக் கப்பல்கள் உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறி வருகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உக்ரைன் துறைமுகத்திலிருந்து தானியக் கப்பல்கள் வௌியேறுவதற்கு ஏற்பட்டுள்ள உடன்பாடு, அந்நாட்டில் அமைதி உருவாகும் என்ற நம்பிக்கையின் ஓர் அடையாளம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 07, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின்னர் கூறியுள்ளார்.

உக்ரைன் துறைமுகத்திலிருந்து தானியக் கப்பல்கள் வௌியேறுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி திருப்தியைத் தருகின்றது என்றும், இந்த உடன்பாடு, அந்நாட்டில் நீதியும், நிலைத்த அமைதியும் காணப்படும் என்ற நம்பிக்கையை வழங்கியிருக்கிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் துறைமுகத்திலிருந்து முதல் தானியக் கப்பல் வௌியேறியிருப்பதை தான் வரவேற்பதாக உரைத்துள்ள திருத்தந்தை, இந்நடவடிக்கை, அமைதி குறித்த உரையாடல் இயலக்கூடியது என்பதையும், அனைவருக்கும் நன்மைதரவல்ல தீர்வுகள் எட்டப்படும் என்பதையும் காட்டுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமிக்கத் தொடங்கியதற்குப்பின்னர், கடந்த வாரத்தில் Odessa துறைமுகத்திலிருந்து முதல் தானியக் கப்பல் புறப்பட்டது. பின்னர், உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரங்களிலிருந்து நான்கு தானியக் கப்பல்கள் வெளியேறியுள்ளன.

ஐக்கிய நாடுகள் நிறுவனம், துருக்கி ஆகிய இரண்டும், இரஷ்யா மற்றும், உக்ரைனோடு ஏறத்தாழ ஒரு மாதமாகப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக, தானியக் கப்பல்கள் துறைமுகத்திலிருந்து வெளியேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

உக்ரைனில், இரஷ்யா போரைத் தொடங்குவதற்குமுன்னர், உலகளாவிய கோதுமை ஏற்றுமதியில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி, இவ்விரு நாடுகளிலும் இடம்பெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2022, 12:40