தேடுதல்

திருத்தந்தையுடன் ஹங்கேரி அரசுத்தலைவர் Novák மற்றும் பலர் திருத்தந்தையுடன் ஹங்கேரி அரசுத்தலைவர் Novák மற்றும் பலர்  

ஹங்கேரி தலைவர்: திருத்தந்தையுடனான சந்திப்பு பணிக்குத் தூண்டுதல்

போர் இடம்பெறும் இக்காலக்கட்டத்தில் பெண் தலைவர்கள் இருக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஹங்கேரி அரசுத்தலவைர் Novák அவர்கள் வத்திக்கான் செய்திகளிடம் எடுத்துரைத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஹங்கேரி நாட்டில் முதல் பெண் அரசுத்தலைவராகப் பணியாற்றிவரும் Katalin Novák அவர்கள், தனது கிறிஸ்தவ நம்பிக்கையும், தாய் என்ற தனித்துவமும், நாட்டை வழிநடத்தும் தனது நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன என்று, ஆகஸ்ட் 25, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது, தனது பணிக்குத் தூண்டுதலாக இருந்தது  என்று கூறியுள்ள ஹங்கேரி அரசுத்தலைவர் Novák அவர்கள், குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது, குடும்பங்களை அமைக்க இளையோரை ஊக்கப்படுத்துவது, பெண் தலைவர்களின், குறிப்பாக, போர் இடம்பெறும் பகுதிகளில் அவர்களின் முக்கியத்துவம், ஹங்கேரி நாட்டுக்குத் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது போன்றவை குறித்து திருத்தந்தையோடு உரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பெண் தலைவர்கள் பணியாற்றவேண்டியதன் முக்கியத்துவம், போர் இடம்பெறும் இக்காலக்கட்டத்தில் பெண் தலைவர்களின் முக்கியத்துவம் குறித்து Novák  அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்துள்ளார்.

ஹங்கேரி நாட்டுத்தலைவர் வத்திக்கான் வானொலியில் செய்தியளிக்கும் போது
ஹங்கேரி நாட்டுத்தலைவர் வத்திக்கான் வானொலியில் செய்தியளிக்கும் போது

அரசுத்தலைவர் என்ற முறையில், தனது சொற்கள், பேசும்முறை, பார்க்கும் முறை, பழக்கவழக்கம், வழங்கும் செய்தி ஆகிய அனைத்திலும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்றுரைத்த Novák அவர்கள், மூன்று பிள்ளைகளுக்கு தாய் என்ற முறையில், தான் பெண் அரசுத்தலைவர் மட்டுமல்ல, ஒரு தாயாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு குடும்பம் முக்கியம், அதேநேரம், எனது பணியை அன்புகூர்கிறேன், என்றும் கூறிய ஹங்கேரி அரசுத்தலைவர், இளையோர் குடும்பங்களை அமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹங்கேரி நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் தான் எதிர்பார்ப்பதாகவும் அரசுத்தலைவர் Novák அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2022, 16:15