தேடுதல்

கர்தினால்கள் கர்தினால்கள் 

திருஅவையின் கர்தினால்கள் அவையில் 20 புதிய கர்தினால்கள்

இம்மாதம் 29, 30 ஆகிய இரு நாள்களில் Praedicate Evangelium என்ற புதிய திருத்தூது கொள்கைத் திரட்டு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்களோடு கூட்டம் ஒன்றை நடத்துவார்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்தியாவின், கோவா பேராயர் Filipe Neri António Sebastião do Rosário Ferrão, ஹைதராபாத் பேராயர் Anthony Poola, சிங்கப்பூர் பேராயர் William Goh Seng Chye ஆகியோர் உட்பட, இருபது பேரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 27, இச்சனிக்கிழமை மாலையில் வத்திக்கானில் நடைபெறுகின்ற திருவழிபாட்டில் கர்தினால் நிலைக்கு உயர்த்துகிறார்

இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இரவு 7.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இருபது பேருக்கும், கர்தினால்களுக்குரிய Berretto எனப்படும் சிவப்புநிற தொப்பி, Zucchetto எனப்படும் தலையை ஒட்டி தலையில் வைக்கப்படும் சிறுவட்டத்தொப்பி, மோதிரம் ஆகியவற்றை அணிவிக்கிறார். கர்தினால் ஆயர், கர்தினால் அருள்பணியாளர், கர்தினால் திருத்தொண்டர் ஆகிய மூன்று தலைப்புக்களில் ஏதாவது ஒன்றை ஒவ்வொருவருக்கும் திருத்தந்தை வழங்குகிறார்.

இத்திருவழிபாட்டிற்குமுன் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் திருத்தந்தை சந்திக்கிறார். இத்திருவழிபாடு முடிந்ததும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், புதிய கர்தினால்களும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்திக்கின்றனர்.  

Praedicate Evangelium கூட்டம்

ஆகஸ்ட் 29, வருகிற திங்கள், 30 செவ்வாய் ஆகிய இரு நாள்களில் Praedicate Evangelium என்ற நற்செய்தி அறிவிப்பு குறித்த புதிய திருத்தூது கொள்கைத் திரட்டு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்களோடு கூட்டம் ஒன்றை நடத்துவார். இதுவரை இக்கூட்டத்தில் 197 கர்தினால்கள் பங்குபெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் நிறைவாக, கர்தினால்கள் அனைவரும் வருகிற செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுவார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2022, 14:41