தேடுதல்

வத்திக்கான் வங்கி (IOR 2019.06) வத்திக்கான் வங்கி (IOR 2019.06) 

IOR நிர்வாகத்தின்கீழ் திருப்பீடத்தின் அசையும் சொத்துக்கள்

திருப்பீடத் துறைகள், மற்றும், அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தின் கையிருப்பு நிதி வத்திக்கான் வங்கியின் நிர்வாகத்தின்கீழ் வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

திருப்பீடத்தின் அசையும் சொத்துக்கள் மற்றும், கையிருப்பு சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பு, வத்திக்கான் வங்கி என பொதுவாக அறியப்படும் IOR நிறுவனத்திற்கு மட்டுமே உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 23 இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் ஆணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பீடத் துறைகள், மற்றும், அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தின் கையிருப்பு நிதி வத்திக்கான் வங்கியின் நிர்வாகத்தின்கீழ் வருகின்றன என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பீடத்தின் அனைத்துத் துறைகள், மற்றும், அதனோடு தொடர்புடைய நிறுவனங்களில், நிதி சார்ந்த அனைத்து முதலீடுகள் மற்றும், கையிருப்பு நிதி ஆகியவற்றின் செயல்பாடுகள் வத்திக்கான் வங்கிக்கு மட்டுமே உரியது என்று திருத்தந்தையின் அறிக்கை கூறுகின்றது.

திருப்பீடத்தின் அனைத்துத் துறைகள், மற்றும், அதனோடு தொடர்புடைய நிறுவனங்களும், இவற்றை வத்திக்கான் வங்கியைத் தவிர வேறு எங்கு வைத்திருந்தாலும், எந்த முறையில் வைத்திருந்தாலும், அவற்றை வத்திக்கான் வங்கிக்கு அறிவிக்கவேண்டும், மற்றும், அவை, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து முப்பது நாள்களுக்குள் அவ்வங்கிக்கு மாற்றப்படவேண்டும் என திருத்தந்தையின் அறிக்கை கூறுகிறது. 

திருத்தந்தை வெளியிட்டுள்ள இந்த ஆணை, Praedicate Evangelium என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தின் பத்தி மூன்றில், 219வது எண்ணோடு தொடர்புடையதாக உள்ளது.

திருத்தந்தையின் இந்த அறிக்கை ஆகஸ்ட் 23, இச்செவ்வாயன்று, திருப்பீட நாளிதழான லொசர்வாத்தோரே ரொமானோவில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை இந்நாளிதழில் வெளிவந்ததோடு நடைமுறைக்கு வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2022, 15:39