வயதுமுதிர்ந்தோர், கனிவன்பின் கலைஞர்களாகச் செயல்பட அழைப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
அன்புள்ள தாத்தாக்கள் பாட்டிகள், மற்றும், முதியோரே, நாம் அனைவரும் கனிவன்பின் கலைஞர்களாக இருக்குமாறு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று, 85 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 23, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
ஜூலை 24, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், முதியோர் இரண்டாவது உலக நாளை மையப்படுத்தி, தாத்தாக்கள் பாட்டிகள், மற்றும், முதியோர் என்ற ஹாஷ்டாக்குடன் (#Grandparents&Elderly), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் இரு குறுஞ்செய்திகளை வெளியிட்டுள்ளார்.
“தாத்தாக்கள் பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோரே, நம் தினசரி வாழ்வின் செயல்பாடுகளை, துணிவோடும் கனிவன்போடும் ஆற்றுவதில் வளர்வதற்கு, நம்மில் இருக்கின்ற இறைவேண்டல் என்னும் விலைமதிப்பற்ற கருவியைப் பயன்படுத்துவோம், நம் நம்பிக்கை நிறைந்த இறைவேண்டல் மிகவும் சக்திவாய்ந்தது” என்று திருத்தந்தை தனது இரண்டாவது டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.
இந்த உலக நாளை மையப்படுத்தி திருத்தந்தை வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், “திருவிவிலியத்தில் கூறப்பட்டிருப்பதுபோன்று ஆண்டவர் இந்நாள்களில் முதுமை நிலையில் வைத்துள்ளவர்களோடு இணைந்து கொண்டாட திருஅவை விரும்புகிறது என்பதை மீண்டும் ஒருமுறை மகிழ்வோடு அறிவிப்பதற்கு, தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், முதியோர் உலக நாள் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், முதியோர் இரண்டாவது உலக நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியை இணையத்தில் வாசிப்பதற்கு உதவியாக, இக்குறுஞ்செய்திகளோடு அதன் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.vatican.va/content/francesco/en/messages/nonni/documents/20220503-messaggio-nonni-anziani.html
ஜூலை 24, இஞ்ஞாயிறு காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை கனடா நாட்டுக்குத் தொடங்கும்வேளை, அன்று காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், உரோம் மறைமாவட்டத்தின் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும் கர்தினால் Angelo De Donatis அவர்கள் இவ்வுலக நாள் திருப்பலியை நிறைவேற்றுவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்