தேடுதல்

இரஷ்யா தாக்குதல் நடத்திய  இடத்தில் மீட்புப் பணியாற்றும் உக்ரைன் மீட்புப் பணியாளர்கள் இரஷ்யா தாக்குதல் நடத்திய இடத்தில் மீட்புப் பணியாற்றும் உக்ரைன் மீட்புப் பணியாளர்கள் 

திருத்தந்தை: நாடுகளில் அமைதி நிலவ ஒன்றிணைந்து செபிப்போம்

வருகிற செப்டம்பர் மாதம் முதல் நாள் சிறப்பிக்கப்படும் படைப்பைப் பாதுகாப்பதற்காக இறைவேண்டல் செய்யும் உலக நாளுக்கான திருத்தந்தையின் செய்தி, இம்மாதம் 21ம் தேதி வெளியிடப்படும்

 

மேரி தெரேசா: வத்திக்கான்

இவ்வுலகத்திற்கு நாம் வழங்கவேண்டிய எளிமையான, மற்றும், மிக அழகான சான்று வாழ்வு குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 19 இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ள குறுஞ்செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

“கடவுளன்பு என்ற கிறிஸ்தவத்தின் சாரத்திற்கு நாம் திரும்பவேண்டும், இந்த அன்பே, உலகின் பாதைகளில் நடப்பதற்கும், நம் அயலவரை வரவேற்பதற்கும், நம்மை அனுப்புகின்ற உந்து சக்தியாகும், இதுவே இவ்வுலகிற்கு நாம் வழங்கவேண்டிய எளிமையான, மற்றும், மிக அழகான சான்றாகும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

இலங்கை, உக்ரைனில் அமைதி நிலவ..

மேலும், இலங்கையிலும், உக்ரைனிலும் அமைதி நிலவ நாம் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட இரு டுவிட்டர் செய்திகள் வழியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகளைக் காணுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாகவும், இந்நடவடிக்கை, வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்வோருக்கு ஆதரவாகவும், அனைவரின் உரிமைகளை மதிப்பதாகவும் இருக்கவேண்டும் எனவும் திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

போரானது, அழிவையும் மரணத்தையுமே உருவாக்கும், மக்களைப் புலம்பெயரக் கட்டாயப்படுத்தும், உண்மை மற்றும், உரையாடலைக் கொலைசெய்யும் என்பதை எவரும் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்ற கேள்வியை எழுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக்கொணர, உரையாடல்கள் மீண்டும் தொடங்கப்படுவதற்காக ஒன்றிணைந்து செபிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதம் முதல் நாள் சிறப்பிக்கப்படும் படைப்பைப் பாதுகாப்பதற்காக இறைவேண்டல் செய்யும் உலக நாளுக்காக திருத்தந்தை தயாரித்துள்ள செய்தி ஜூலை 21, வருகிற வியாழனன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2022, 15:00