மரியே, வன்முறை இதயங்களில் மாற்றத்தைக் கொணரும்
மேரி தெரேசா: வத்திக்கான்
போர், காழ்ப்புணர்வு, வறுமை போன்றவற்றை உருவாக்கும் இதயங்களில் மனமாற்றத்தைக் கொணர்ந்தருளும் என்று, இச்சனிக்கிழமையன்று அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 16, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட கார்மேல் அன்னை மரியா விழாவை முன்னிட்டு, நம் கார்மேல் அன்னை மரியா (#OurLadyofMountCarmel) என்ற ஹாஷ்டாக்குடன் அன்னை மரியாவிடம் ஒரு சிறிய இறைவேண்டலை, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மரியாவிடம் இறைவேண்டல்
- ஓ மரியே, கடலின் விண்மீனே, இறையன்னையே, எம் தாயே,
- தினமும் கடலில் ஆபத்துக்களை எதிர்கொள்பவர்கள்மீது உமது இனிமைமிகு பார்வையைத் திருப்பியருளும்.
- அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை உறுதிசெய்தருளும்
- படைப்பை மதித்து பாதுகாக்கவும், மக்கள் மத்தியில் அமைதிக்குப் பணியாற்றவும் எமக்கு உதவியருளும்.
- பாவிகளின் அடைக்கலமே, போர், காழ்ப்புணர்வு, வறுமை போன்றவற்றை உருவாக்கும் இதயங்களில் மனமாற்றத்தைக் கொணரும்.
- புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோரை வரவேற்கின்ற, மற்றும், பணியாற்றுகின்ற
- பிறரன்பின் முன்மாதிரிகையாய் விளங்கும், நன்மனம்கொண்ட ஆண்களை, பெண்களை ஆசிர்வதியும்.
- அவர்கள் பெறுகின்ற மற்றும் கொடுக்கின்ற அன்பு,
- புதிய உடன்பிறந்த உணர்வுப் பிணைப்புகளின் விதையாகவும்,
- அமைதியான ஓர் உலகின் விடியலாகவும் இருப்பதாக, ஆமென்.
கார்மேல் அன்னை மரியா
கார்மேல் என்பதற்கு அழகிய தோட்டம் என்பது பொருள். புனித பூமியுள்ள கார்மேல் மலையில், 12ம் நூற்றாண்டில், தங்கள் வாழ்வைத் தொடங்கிய துறவியர், கார்மேல் சபையினர் என அழைக்கப்படுகின்றனர். புனித மலை எனவும் அழைக்கப்படும் கார்மேல் மலையில், அத்துறவியர், அன்னை மரியாவுக்கென ஓர் ஆலயம் எழுப்பி, அந்த அன்னைக்கு கார்மேல் அன்னை எனவும் பெயர்சூட்டினர். அழகிய தோட்டமாகிய, அன்னை மரியாவின் புண்ணிய பாதையைச் சரியாகப் பின்பற்றும்போது நாமும் அழகிய தோட்டமாக மாறுகிறோம். கார்மேல் அன்னையின் திருநாள், திருஅவையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 16ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளின் திருவழிபாட்டில், கார்மேல் சபை துறவியர், உத்திரியம் எனப்படும் கழுத்துப்பட்டையை ஆசிர்வதித்து இறைமக்களுக்கு வழங்குகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்