அரசுஅதிகாரிகள்,இனக்குழுத் தலைவர்களுடன் திருத்தந்தை
மெரினா ராஜ்- வத்திக்கான்
37 வது தவத்திருப்பயணமாக கனடா நாட்டிற்கு சென்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 27 இப்புதனன்று அந்நாட்டு அதிகாரத்தில் இருப்போர், பூர்விக இனக்குழுத்தலைவர்கள், கியூபெக் அரசியல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்.
பகிர்வையும் பாதுகாப்பையும் வலியுறுத்தும் மேப்பிள்ஸ் இலைகள்
வியக்கத்தக்க இயற்கை வளங்களை தன்னகத்தேக் கொண்ட கனடா நாட்டிற்காக பொறுப்புடன் பணியாற்றும் ஆளுநர் மேரி சைமன், பிரதமர் ஜஸ்டின் truedo அவர்கள் மற்றும் உடன் பணியாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். கனடா நாட்டையும் அதன் கிராமப்புற பகுதிகளையும் மிக அழகாக வண்ணமயமாக, தனித்துவமாகக் காட்டும் மேப்பிள்ஸ் காடுகளையும் கியூபெக்கின் அரசு சின்னத்தில் தொடங்கி அதன் தேசியக் கோடி வரை இடம் பிடித்த மேப்பி இலைகளையும் மையமாக வைத்து எனது உரையைத் துவக்குகின்றேன்.
தொடக்க கால கனடா நாட்டு பூர்விக இனமக்கள் மேப்பிள் மரங்களிலிருந்து சாறு எடுத்து அதை சுவையான நீராக பருகி பயன்படுத்தி வந்தனர். அவர்களின் இச்செயல் இயற்கையோடு அவர்கள் கொண்ட ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு ஆர்வத்தை, இயற்கையோடு கொண்டிருந்த இணக்கத்தை எடுத்துரைக்கின்றது. படைத்த கடவுளை அன்பு செய்யவும், பிற உயிர்களோடு இணக்கமாக வாழவும் கற்றுத்தரும் இயற்கை, கடவுளுக்கு, மனிதர்களுக்கு மற்றும் சூழலுக்கு செவிமடுக்கவும் நமக்கு கற்றுத்தருகின்றது. மனித செயல்பாடுகளின் வேகமானது, நமது சிந்தனை, உடன்பிறந்த உணர்வு, ஒன்றிப்பு ஆகியவற்றை பாதிக்கும் இன்றைய சூழலில் நாம் ஒருவர் ஒருவரோடு உரையாடி செவிமடுத்து நம்முடைய வேறுபாடுகளையும், நல்லவர் கெட்டவர் என்று பிரிக்கும் வெறுப்பு உணர்வையும் நீக்க முயற்சிக்க வேண்டும். தனது அகன்ற இலைகளின் வழியாக அசுத்தமான காற்றை அகற்றி சுத்தமான ஆக்சிஜனை நமக்கு தரும் மேப்பிள்ஸ் இலைகள் இயற்கையை போற்றவும் பூர்விக இனமக்களின் வாழ்க்கை மதிப்பீடுகளை நமது வாழ்வாக்கவும் அழைக்கின்றன.
பூர்விக இனமக்களின் மொழி கலாச்சாரம் உலகப்பார்வை அடிப்படையில் அவர்களது குழந்தைகள் உறைவிடப்பள்ளிகளில் கிறிஸ்தவ நிர்வாகங்களின்கீழ் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து இங்கு கூடியுள்ள ஆயர் குழுக்களோடு இணைந்து மீண்டும் என்னுடைய மன்னிப்பை தெரியப்படுத்துகிறேன். கனடா உயர்ந்த அடையாளமும், சிறந்த மக்களைக் கொண்ட நாடாகவும் உருவாக, கிறிஸ்தவ நம்பிக்கை பெரிதும் உழைத்துள்ள அதே நேரத்தில், வழியில் ஏற்பட்ட தவறை ஏற்றுக்கொண்டு ஒன்றிணைந்து பயணித்து உங்களுக்குரிய நல் இலக்குகளை அடைய செயல்படுகின்றோம். பூர்விக இன மக்களின் நியாயமான உரிமைகள், ஒப்புரவு மற்றும் குணப்படுத்தல் பூர்விக இனமல்லாத மக்களோடு நல்லிணக்கம் ஏற்படுத்தல் ஆகியவற்றினை செயல்படுத்துவதன் வழியாக, ஒப்புரவு மற்றும் உண்மை ஆணையக் குழுவிற்கு சரியான பதிலைத் தருகின்றோம்.
காலனித்துவ வடிவங்கள்
காலனித்துவம் கொடுத்த துன்ப வரலாற்றையும், அவமதிப்பையும் உடனடியாக குணப்படுத்தி விட முடியாது. எனினும் காலனித்துவம் இன்னும் மறைந்துவிடவில்லை சில இடங்களில் மக்களின் கலாச்சாரத்தை வேரோடு அழிக்க, இயற்கை மீது அவர்கள் கொண்டுள்ள தொடர்பை நீக்க பல முயற்சிகளில் ஈடுபடுவதன் வழியாக பல்வேறு வடிவங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பது கடந்த கால துன்ப வரலாறு விட்டுசென்ற விளைவுகள் என்று கூட சொல்லலாம். இது கலாச்சார முறிவிற்கு வழிவகுக்கின்றது. இதனால் ஏழைகள், புலம் பெயர்ந்தவர்கள், முதியவர்கள், நோயாளிகள், கருவில் இருக்கும் குழந்தைகள் போன்றோர் இந்த வசதியுள்ள சமூகங்களில் மறக்கப்பட்டவர்களாகி, எரிக்கப்பட வேண்டிய காய்ந்த இலைகளைப் போல ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களாகின்றனர்.
குடும்பம் வழியாக மனிதத்துவம் பரவுகிறது
மேப்பிள் மரத்தின் பசுமையான இலைகள் நாட்டின் முழுமையையும் ஒரே மாதிரியாக உருவாக்கப்படாத மனித குழுக்களையும் நினைவுபடுத்துகின்றது. இலைகள் எவ்வாறு கிளைகளின் பசுமைக்கும் செழுமைக்கும் காரணமாக அமைகின்றதோ அது போல் ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் செழுமைக்கு காரணமாக அமைகின்றது. புனித இரண்டாம் யோவான் பவுல் சொல்வது போல், எதிர்கால மனிதத்துவம் குடும்பங்களின் வழியாக பரவுகிறது. குடும்ப வன்முறை, ஓய்வற்ற உழைப்பு, தனித்தியங்கும் மனப்பான்மை, மனதுக்கு பிடிக்காத வேலை, வேலையில்லாத்திண்டாட்டம், தனிமைப்படுத்தப்படும் இளைஞர்கள், கைவிடப்படும் முதியோர், உடல்நலக்குறைவு போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்டாலும், உறுதியான, அதேவேளை முதன்மை இயல்பு சமூகம் குடும்பம் தான்.
குடும்பத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் பராமரிக்க வேண்டும் என்பதனை பூர்விக இனக்குழுக்கள் நமக்கு கற்பிக்கின்றன. சிறுவயதிலிருந்தே, குழந்தைகள் தவறிலிருந்து சரியானதை அடையாளம் காண, உண்மையாக இருக்க, பகிர, தவறுகளைத் திருத்த, புதிதாகத் தொடங்க, ஒருவரையொருவர் ஆறுதல்படுத்த, அமைதி ஏற்படுத்த கற்றுக்கொடுக்கின்றார்கள். இருப்பினும் இவர்களது குழந்தைகளுக்கு ஏற்பட்ட குற்றங்கள் தவறுகள் இன்று நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குடும்பங்களின் செழுமை சமூகத்தின் வளமை என்பதை உணர்ந்து குடும்பங்களை பாதுகாத்து பராமரிப்போம்.
காயங்களை ஆற்றும் மருந்து
போர்க்காலத்தில் வீரர்கள் மேப்பிள்ஸ் இலைகளை காயங்கள் ஆற்றும் மருந்தாக பயன்படுத்தினர். இக்காலக்கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அறிவற்ற போர் ஏற்படுத்தும் பகைமை வன்முறையினால் ஏற்படும் காயங்களை அமைதியின் வழியாக குணப்படுத்த வேண்டும். யாரையும் வெறுக்காதே என்பது அமைதியின் இரகசியம். நாம் நன்றாக வாழ விரும்பினால் யாரையும் வெறுக்காமல் அன்பு செய்து வாழ வேண்டும். போரிலிருந்து நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்பதை அல்ல போரை எப்படி நிறுத்துவது என்பது பற்றியே நாம் கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்.
பன்முக கலாச்சாரம் கொண்ட கனடாவில் உணவிற்காக மட்டுமன்றி வீடில்லாத மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் நல்ல மனம் கொண்டவர்கள் இருப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. நாட்டின் தேசியக் கொடி முதல் தயாரிக்கப்படும் பொருட்கள் வரை மேப்பிள் இலைகளை சின்னமாக கொண்ட இந்த நாடு பகிர்வையும், பாதுகாப்பையும் அடையாளப்படுத்தி உலக மக்களையும் செயல்பட தூண்டுகின்றது. ஒன்றிணைந்து செயல்படுவதன் வழியாக இன்றைய நெருக்கடியான சவால்களை நாம் எதிர்கொள்ளும் வேளையில் உங்கள் விருந்தோம்பல், கவனிப்பு மற்றும் மதிப்பிற்கு நன்றி கூறுகின்றேன். கனடாவும், அதில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதை என் மனப்பூர்வமான அன்பின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்