இலங்கை போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி இலங்கை போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி 

திருத்தந்தை: பொது நலனுக்காக உரையாடலைத் தொடங்குங்கள்

இலங்கையில் அனைத்துவிதமான வன்முறைகள் கைவிடப்பட்டு, அனைவரின் உரிமைகள் மதிக்கப்படும்நிலையில், பொது நலனுக்காக உரையாடல் தொடங்கப்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

கடுமையான பொருளாதார நெருக்கடியால் மிகவும் துன்புறும் இலங்கை மக்களோடுள்ள தனது அருகாமையை, ஜூலை 17, இஞ்ஞாயிறன்றும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இலங்கையில் அரசுத்தலைவர் பதவி விலகக் காரணமான அந்நாட்டின் பொருளாதார நெருக்கடி, மற்றும், மக்களின் கொந்தளிப்பு குறித்து குறிப்பிட்டு, துன்புறும் அம்மக்களோடு தானும் இணைந்து இறைவேண்டல் செய்வதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர் துன்புறும் இலங்கை மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை, தற்போது அந்நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும், வாழ்வாதாரங்கள் புறக்கணிப்பட்டதால் அவை நாடு தழுவிய கொந்தளிப்புக்கு காரணமாகியுள்ளன என்றுரைத்துள்ள திருத்தந்தை,  ஊழல், திறமையற்ற பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், அத்தீர்வுகள், அனைவரின் உரிமைகள் மதிக்கப்படும் நிலையில், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார்.

இலங்கையில் அனைத்து விதமான வன்முறைகள் கைவிடப்பட்டு, பொது நலனுக்காக உரையாடல் தொடங்கப்படவேண்டும் என்று விண்ணப்பிக்கும் சமயத் தலைவர்களோடு தானும் இணைவதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.   

அவசரகால நிலை

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்பான நிலையற்றதன்மை மற்றும் போராட்டங்கள் வலுப்பெற்ற நிலையிலேயே, இம்மாதம் 14ஆம் தேதி அவசரகால நிலையை, பதில் அரசுத்தலைவர் இரணில் விக்ரமசிங்கே அவர்கள் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, இலங்கையில் நூறு நாள்களாக போராட்டங்கள் இடம்பெற்றிருந்தபோது அறிவிக்கப்படாத அவசரகால நிலை, இப்போது எதற்கு என்ற கேள்வியை எழுப்பியுள்ள அருள்பணி Jeewantha Peiris அவர்கள், இந்த திடீர் அறிவிப்பு, போராட்டதாரர்களை மிரட்டி அடக்குவதாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2022, 12:35