ஜூலையில் புதன் மறைக்கல்வியுரைகள் இடம்பெறாது
மேரி தெரேசா: வத்திக்கான்
இயேசுவுக்கு நம் இதயங்களைத் திறக்கின்றபோதெல்லாம், கடவுளின் ஆசிர்வாதம் நம் வாழ்வில் நுழைகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 2, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
கனடாவில் ஜூலை 24-29
மேலும், இத்தாலியில் கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஜூலை மாத புதன் பொது மறைக்கல்வியுரைகள், மற்றும் பெரும்பாலான அவரது நடவடிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆயினும், திருத்தந்தையின் இந்த ஜூலை மாத நடவடிக்கைகளில், இம்மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை கனடா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது உள்ளது.
ஜூலை மாதத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரைகள், மீண்டும் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கும் என்று திருப்பீட செய்தித்தொடர்பகம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டு பிப்ரவரி 23ம் தேதியிலிருந்து புனித யோசேப்பு குறித்த தன் சிந்தனைகளை, புதன் பொது மறைக்கல்வியுரைகளில் வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்தின் அடிப்படையில் தற்போது முதுமை குறித்து வழங்கி வருகிறார்.
அதேநேரம், ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருக்கும் மக்களுக்கு திருத்தந்தையின் வழக்கமான மூவேளை செப உரைகள் இடம்பெறும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்