செப்டம்பரில் அசிசி, மத்தேராவில் திருத்தந்தை பிரான்சிஸ்
இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில், இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும் ‘பிரான்செஸ்கோ பொருளாதாரம்’ என்ற நிகழ்விலும், மத்தேரா நகரில் நடைபெறும் 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டிலும் பங்குகொள்ளச் செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘பிரான்செஸ்கோ பொருளாதாரம்’ என்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வருகிற செப்டம்பர் 24ஆம் தேதியும், 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டில் பங்குபெற செப்டம்பர் 25ஆம் தேதியும், அந்நகரங்களுக்குச் செல்வார்.
ஜூலை 08, இவ்வெள்ளியன்று, திருத்தந்தையின் இப்பயணங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இவ்விரு நகரங்களிலும் திருத்தந்தையின் நிகழ்வுகள் காலையில் தொடங்கி மதிய உணவுக்குமுன் நிறைவடையும் என்று அறிவித்துள்ளது.
பிரான்செஸ்கோ பொருளாதாரம்
பொருளாதாரத்தை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கவும், செயல்படுத்தவும் இளம் பொருளாதார வல்லுநர்கள், தொழில்முனைவோர், மாற்றம் கொணர்பவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், அசிசி நகரில் வருகிற செப்டம்பரில், பிரான்செஸ்கோ பொருளாதாரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு நடைபெறுகிறது.
செப்டம்பரில் திருத்தந்தை அசிசி நகருக்கு மேற்கொள்ளும் ஆறாவது பயணமாக அமைகின்ற இப்பயணத்தில், அவர் இளையோரைச் சந்தித்து உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்தேரா நகரில் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி முதல், 25ஆம் தேதி வரை நடைபெறும் 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டை முன்னிட்டு, 25ம் தேதி அந்நகருக்குச் செல்லும் திருத்தந்தை, அம்மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பங்குகொள்வார்.
“அப்பத்தைச் சுவைக்க மீண்டும் செல்வோம்: திருநற்கருணை மற்றும், ஒருங்கிணைந்த திருஅவைக்காக” என்ற தலைப்பில் இத்தேசிய நற்கருணை மாநாடு நடைபெறும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்