ஆயர்களிடம் திருத்தந்தை: விசுவாசிகளிடம் மிகநெருக்கமாக இருங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைனில் போரினால் துன்புறும் மக்களோடு தனது உடனிருப்பு மற்றும், இறைவேண்டல்களை, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் வழியாகத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரைனின் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை ஆயர்கள், போலந்து நாட்டில் நடத்திவரும் பேரவையை முன்னிட்டு, அந்நாட்டு கிரேக்க கத்தோலிக்கரின் தலைவரான கீவ் பேராயர் Sviatoslav Shevchuk அவர்களுக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் மக்களோடு தனது தோழமையுணர்வைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சந்திப்பு, நம்பிக்கை, மற்றும், ஒருவருக்கொருவர் உதவிபுரியும் இடமாக, திருஅவை மக்களுக்கு விளங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஆயர்கள், தங்களின் வாழ்விடங்களைவிட்டு வெளியே சென்று, மக்களோடு நேரம் செலவிட்டு, அவர்கள் பேசுவதை உற்றுக்கேட்கவேண்டும், மற்றும், அவர்களுக்கு உதவவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
துயருறும் மக்களுக்கு, திருஅவையின் ஆறுதலையும் ஊக்கத்தையும் வழங்குபவர்களாக ஆயர்கள் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, ஆயர்கள், ஒவ்வொரு நாளும் மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதன்வழியாக, அவர்கள், திருஅவையிடமிருந்து நம்பிக்கையின் உயிருள்ள தண்ணீரைப் பருகமுடியும் எனவும் கூறியுள்ளார்.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரினால், அந்நாட்டு கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை ஆயர்கள், போலந்து நாட்டின் Przemysl நகரில், தங்களின் பேரவையை நடத்துகின்றனர். இம்மாதம் 7ம் தேதி தொடங்கப்பட்ட இப்பேரவை, வருகிற வெள்ளியன்று நிறைவடையும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்