திருத்தந்தை: கனடாவுக்கு தவ திருப்பயணம் மேற்கொள்கிறேன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஜூலை 17, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், தான் மேற்கொள்ளவிருக்கும் கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணம் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
ஜூலை 24, வருகிற ஞாயிறன்று தான் துவங்கும் கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணம், தவத் திருப்பயணமாக அமையும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பயணம், அந்நாட்டு பூர்வீக இன மக்களோடு ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு உதவும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
கடவுளுக்கு விருப்பமானால், வருகிற ஞாயிறன்று கனடாவுக்குப் புறப்படுவேன் என்றும் இந்நேரத்தில் கனடா நாட்டு மக்களுக்கு செய்தியளிக்க விரும்புகிறேன் என்றும் உரைத்த திருத்தந்தை, கனடா மக்களே, நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பதுபோல, பூர்வீக இன மக்களைச் சந்திக்கவும், அரவணைக்கவும், உங்கள் மத்தியில் குறிப்பாக இயேசுவின் பெயரால் வருகிறேன் என்று கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் பூர்வீக இனச் சமுதாயங்களை பல்வேறு வழிகளில் கடுமையாய் புண்படுத்தியுள்ள, கலாச்சார ஒருங்கிணைப்புக் கொள்கைகளுக்கு, சமய நிறுவனங்களின் சில உறுப்பினர்கள் உட்பட பல கிறிஸ்தவர்கள் தங்களின் பங்களிப்பை அளித்திருப்பது கவலைக்குரியதே என்று திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
கனடாவின், ‘முதல் நாடுகள்’, Inuit, Métis ஆகிய பூர்வீக இன அமைப்புகளின் பிரதிநிதிகளை, இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் வத்திக்கானில் சந்தித்து, விடுதிப் பள்ளி அமைப்பில் அம்மக்களின் வாழ்வுமுறை குறித்த கதைகளைக் கேட்டறிந்தேன், அச்சந்திப்பின்போது அம்மக்களோடு தனது தோழமையுணர்வையும் வெளிப்படுத்தினேன் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
தவ திருப்பயணம்
தற்போது, நான் கனடாவுக்கு ஒரு தவத் திருப்பயணத்தை மேற்கொள்கிறேன், இப்பயணம், கடவுளின் அருளால், அந்நாட்டில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் குணப்படுத்தல், மற்றும், ஒப்புரவு நடவடிக்கைகளுக்கு உதவும் என நம்புகிறேன் என்றுரைத்த திருத்தந்தை, கனடாவில் தன்னை வரவேற்க தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
உங்களது செபத்தால் என்னோடு உடன்பயணியுங்கள் என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் பங்குகொண்ட திருப்பயணிகளிடம் திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்.
இம்மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை,கனடா நாட்டின் Edmonton, Québec, Iqaluit ஆகிய நகரங்களில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்