மின்னியல் ஊடகம் அறநெறி சிக்கல்களை எழுப்புகிறது :திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஊடகங்களில் நச்சுத்தன்மை, வெறுப்புப் பேச்சு மற்றும் போலி செய்திகள் ஆகியவற்றின் சவாலை எதிர்கொள்வதில் SIGNIS எனப்படும் பொதுநிலையினரின் தகவல் தொடர்பு அமைப்பானது முக்கிய பங்காற்ற முடியும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வரும் ஆகஸ்ட் மாதம் சியோலில் நடைபெறவிருக்கும் SIGNIS அமைப்பின் உலக மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன தகவல்தொடர்பு வழிமுறைகள் நமது மனித குடும்பத்திற்குள் ஒற்றுமை மற்றும் உரையாடலை வளர்ப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த வழிமுறையாக இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய நமது உலகில் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிவற்றின் பெரும் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாள்களில், ‘மின்னியல் உலகில் அமைதி' என்ற தலைப்பை இம்மாநாட்டின் கருப்பொருளாக அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது என்றும் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மின்னியல் ஊடகத்தின் பயன்பாடு, குறிப்பாக சமூக ஊடகங்கள், தீவிரமான பல அறநெறி சிக்கல்களை எழுப்பியுள்ளன என்றும், அவை தகவல்தொடர்பாளர்களின் தரப்பில் அறிவார்ந்த மற்றும் விவேகமான தீர்ப்புக்கு அழைப்பு விடுகின்றன என்றும், கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊடகக் கல்வி, கத்தோலிக்க ஊடகங்களை வலையமைத்தல் மற்றும் பொய்கள் மற்றும் தவறான தகவல்களை எதிர்கொள்வது ஆகியவற்றின் வழியாக SIGNIS அமைப்பு முக்கிய பங்காற்ற முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார் .
நல்லதொரு விமர்சன கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளவும், பொய்யிலிருந்து உண்மை, தவறிலிருந்து சரியானது, தீமையிலிருந்து நன்மை ஆகியவற்றை வேறுபடுத்தி அறியவும், நீதிக்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், நமது பொதுவான இல்லத்தின் மாண்பிற்காகவும் பணியாற்றவும் இவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்