தேடுதல்

மரக்கன்றிற்கு உரமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் மரக்கன்றிற்கு உரமிடும் திருத்தந்தை பிரான்சிஸ்  

படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளுக்கான திருத்தந்தை செய்தி

நமது பொதுவான இல்லமாகிய இப்புவியைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யவும் பணியாற்றவும் இது ஒரு அழகான நேரம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

படைப்பின் வேதனையான அழுகுரல்களைக் கேட்டு, நாம் மனமாற்றம் பெற்று, நமது வாழ்க்கை முறைகளையும், அழிவுதரும் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று, செப்டம்பர் மாதம் முதல் நாள் கொண்டாடப்பவிருக்கிற படைப்பைப் பாதுகாக்கும் உலக இறைவேண்டல் நாளுக்காக அனுப்பியுள்ள செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

படைப்பின் குரலைக் நாம் கேட்கக் கற்றுக்கொண்டால், அந்தக் குரலில் ஒரு அதிருப்தி இருப்பதை நம்மால் காணமுடியும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அன்பான படைப்பாளரைப் புகழ்ந்து பாடும் ஒரு இனிமையான பாடலையும் அக்குரலில் கேட்கலாம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அந்த இனிமையான பாடலின் வேதனையில் ஐந்துவிதமான அழுகுரல்களும் சேர்ந்துள்ளன என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலாவது, நம் பூமித் தாய் கதறி அழுகிறாள் என்றும், நமது நுகர்வோரின் அத்துமீறல்களுக்கு இரையாகி அவள் அழுவதுடன், நம் தவறான பயன்பாடுகளுக்கும் அவளது அழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்படி கெஞ்சுகிறாள் என்றும் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, புவியிலுள்ள வெவ்வேறு உயிரினங்கள் அனைத்தும் கதறி அழுகின்றன என்றும், குரலெழுப்ப முடியாத எண்ணற்ற உயிரினங்கள் அழிந்து வருவதோடு அவற்றின் புகழ்ச்சிப் பாடல்கள் மௌனமாக்கப்படுகின்றன என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்றாவதாக, கதறி அழும் ஏழைகளும் நம்மிடையே இருக்கிறார்கள். காலநிலை நெருக்கடிக்கு ஆளான இத்தகைய ஏழை மக்கள், வறட்சி, வெள்ளம், சூறாவளி மற்றும் வெப்பக் காற்றின் தாக்கத்தை இன்னும் தீவிரமாக உணர்ந்தவர்களாய் வேதனைக் குரல்களில் கதறி அழுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நான்காவதாக, பூர்வீக மக்களின் சகோதரர் சகோதரிகளும் கதறி அழுதுக் கொண்டிருக்கின்றனர் என்று விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொள்ளையடிக்கப்படும் பொருளாதார நலன்களின் விளைவாக, அவர்களின் மூதாதையர் நிலங்கள் எல்லாப் பக்கங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதால் அவர்களின் அழுகுரல்கள் விண்ணை நோக்கி எழுகின்றன என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தொலைநோக்கு மற்றும் சுயநலச் செயல்பாடுகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளதை உணர்ந்து, இன்றைய நம் குழந்தைகளும் இளையோரும் கதறி அழுகிறார்கள் என்றும், சுற்றுச்சூழச் சீர்கேட்டைத் தடுக்கவோ அல்லது குறைந்தபட்சம் அதனைக் கட்டுப்படுத்தவோ முடிந்த அனைத்தையும் செய்யுமாறு பெரியவர்களாகிய நம்மை ஆர்வத்துடன் கேட்கிறார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத் 3:2) என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி படைப்பின் வேதனையான அழுகுரல்களைக் கேட்டு, நாம் மனமாற்றம் பெற்று, நமது வாழ்க்கை முறைகளையும், அழிவுகரமான செயல்படுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மனமாற்றம் தனிப்பட்ட விதத்திலும் குழும நிலையிலும் நிகழவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

2022 நவம்பர் மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP27 மாநாடு, பாரிஸ் ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதை ஊக்குவிப்பதில் அனைவரும் இணைவதற்கான அடுத்த வாய்ப்பை வழங்கவிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அவ்வாறே, டிசம்பர் மாதத்தில் கனடாவில் நடைபெறவுள்ள பல்லுயிர் பெருக்கம் தொடர்பான COP15 உச்சிமாநாடு, சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உயிரினங்களின் அழிவைத் தடுக்க புதிய பலதரப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பை அரசுகளுக்கு வழங்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சுரங்கம், எண்ணெய், வனவியல், மனை விற்பனை, வேளாண்வணிகம் போன்ற தொழில்கள் வழியாக, காடுகள், ஈரநிலங்கள், மலைகள் ஆகியவற்றை அழிப்பதையும், ஆறுகள் மற்றும் கடல்களை மாசுபடுத்துவதையும், உணவை நஞ்சாக்குவதையும் நிறுத்தவும்  கடவுளின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன் என்று விண்ணப்பித்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2022, 14:25