பல்சமய உரையாடல், நம் காலத்தின் இறைபராமரிப்பின் அடையாளம்
மேரி தெரேசா: வத்திக்கான்
கிறிஸ்தவர்களும் யூதர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது, மேற்குலக சமுதாயத்தின் எதிர்மறைப் போக்கிற்கு மாற்றாக அமைந்திருக்கும் மற்றும், அது அச்சமுதாயத்திற்கு மிகவும் அவசியமானது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமய கலந்துரையாடல் குறித்த பன்னாட்டு யூதமதக் குழுவிடம் கூறியுள்ளார்.
இக்குழுவினரை, ஜூன் 30, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து, அவர்களோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு முழங்கால் மூட்டில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக, அச்சந்திப்பை நடத்த அவரால் இயலவில்லை என்பதால், திருத்தந்தைக்குப் பதிலாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்கள், அக்குழுவினரோடு கலந்துரையாடல் நடத்தி, திருத்தந்தை தயாரித்து வைத்திருந்த செய்தியை வாசித்தார்.
அச்செய்தியில், கிறிஸ்தவர்களும் யூதர்களும் ஒருவரையொருவர் சந்திப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பல்சமய உரையாடல், காலத்தின், மற்றும், இறைபராமரிப்பின் ஓர் அடையாளம் என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடவுள், தம் ஞானமுள்ள திட்டத்தில், சமயத் தலைவர்கள் மற்றும், ஏனையோர், சமய வேறுபாடுகளை மதித்து, ஒருவர் ஒருவரைச் சந்திக்கவும், ஒருவர் ஒருவரை அறிந்துகொள்ளவும் தூண்டுதல் அளிக்கப்பட்டுள்ளது, ஓர் இறைபராமரிப்பின் அடையாளம் எனத் தான் கருதுவதாக திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைந்து சான்றுபகர அழைப்பு
அனைத்து மக்களையும் அன்புகூர்ந்து, பராமரிக்கும் கடவுளின் இரக்கம், மற்றும், நீதிக்கு, கிறிஸ்தவர்களும் யூதர்களும் ஒன்றிணைந்து சான்றுபகர அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, வன்முறையும், காழ்ப்புணர்வும், நம் இறைநம்பிக்கையோடு ஒத்திணங்கிச் செல்லாதவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணக்கமின்மைகள், வேற்றுமைகள், முரண்பாடுகள் ஆகியவற்றை ஆயுதமோதல்களால் அல்ல, மாறாக, முற்சார்பு எண்ணமின்றி, அமைதிநிறை எண்ணத்தோடும், அனைவருக்கும் ஏற்றமுறையில் இணக்கத்தைக் காணும்முறையிலும் களையவேண்டும் என, நம் மத மரபுகள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
திருஅவை, யூதமதவிரோதப் போக்கிற்கு எதிராகச் செயல்பட தன்னை அர்ப்பணித்துள்ளது என்பதை மீண்டும் எடுத்துரைத்த திருத்தந்தை, பல்சமய உரையாடல், நம் உலகில், உடன்பிறந்த உணர்விலும், அமைதியிலும் வளர நல்லதொரு பாதை என்றும், இது, சமயத் தீவிரவாதம் உட்பட பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துச் செயல்பட உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்