தேடுதல்

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்Pullelaவுக்கு  திருத்தந்தை பேட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்Pullelaவுக்கு திருத்தந்தை பேட்டி 

கருக்கலைப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை மதிக்கிறேன்

காங்கோ மக்களாட்சி குடியரசுக்கும், தென் சூடானுக்கும் இப்போது நான் சென்றிருந்தால் கனடாவுக்குச் செல்ல முடியாது என மருத்துவர்கள் கூறியதால், அந்நாடுகளுக்குச் செல்லவில்லை - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், தேசிய அளவில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருந்த ஐம்பது ஆண்டுகால கருக்கலைப்பு உரிமையை இரத்துசெய்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை மதிக்கும் அதேவேளை, கருக்கலைப்புக்கு எதிரான தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரிகையாளர் Philip Pullela அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியத்தில் வழங்கியுள்ள ஒன்றரை மணிநேர பேட்டியில், அந்நாட்டில் கருக்கலைப்பு உரிமையை உச்ச நீதிமன்றம் இரத்து செய்து, அந்த உரிமையை தனி மாநிலங்களுக்கு அனுமதியளித்துள்ளது குறித்த விவகாரத்தை, நீதித்துறை கண்ணோட்டத்திலிருந்து கருத்துச் சொல்வதற்கு அது பற்றி போதுமான அளவு வாசிக்கவில்லை என்று கூறியுள்ளார். திருத்தந்தை வழங்கியுள்ள இப்பேட்டி, ஜூலை 4, இத்திங்களன்று வெளியிடப்பட்டுள்ளது.

கருக்கலைப்புக்கு எதிரான தன் கண்டனத்தை மீண்டும் வெளியிட்டுள்ள திருத்தந்தை, ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, ஒரு மனித வாழ்வை அழிப்பது, சட்டமுறையானதா,  மற்றும், சரியானதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளதோடு, கருக்கலைப்பை  ஆதரிக்கும் கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு அது குறித்த மேய்ப்புப்பணி அணுகுமுறையை எடுத்துரைப்பது முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.  

திருஅவையும், ஆயர் ஒருவரும் தங்களின் மேய்ப்புப்பணி இயல்புகளை இழக்கும்போது, அது ஓர் அரசியல் பிரச்சனைக்கு காரணமாகின்றது என்றுரைத்த திருத்தந்தையிடம், அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது பற்றிய வதந்திகள் குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

பணி விலகல் குறித்த வதந்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய நகரமான L’Aquilaவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது குறித்த திட்டம் குறித்து குறிப்பிட்ட பத்திரிகையாளர் Pullella அவர்கள், அந்நகரம், 1294ம் ஆண்டில் திருத்தந்தை 5ம் செலஸ்டின் தலைமைப்பொறுப்பைத் துறந்ததோடு தொடர்புடையது மற்றும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2009ம் ஆண்டில் அந்நகரைப் பார்வையிட்டபோது தன் பால்யத்தை அத்திருத்தந்தையின் கல்லறையில் வைத்தார், அப்போது அவர் தலைமைப்பணியை துறப்பது குறித்து நினைத்திருக்கலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கூறினார். இவை, இம்மாதிரி என்னைப் பற்றி நினைக்க வைத்திருக்கலாம், ஆனால், அத்தகைய எண்ணம் ஒருபோதும் மனதில் தோன்றவில்லை, அவ்வெண்ணம் இப்போதைக்கு இல்லை, ஆயினும் பணித்துறப்பு, ஒரு வாய்ப்பாக உள்ளது, எடுத்துக்காட்டாக, திருஅவையை நடத்தமுடியாது என உடல்நிலை அறிவிக்கும் கட்டத்தில், அந்த வாய்ப்பு உள்ளது, நமக்குத் தெரியாது, கடவுள்தான் சொல்வார் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

உடல்நலம், பயணங்கள்

தனக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது, தனக்கு புற்றுநோய் பாதிப்பு என்ற வதந்திகள், வெறும் புறணிப் பேச்சாகும் என்றும், தனது முழங்கால் மூட்டில் தசைநார் வீக்கமடைந்துள்ளதால் துன்புறுகிறேன், மெது மெதுவாக குணமடைந்து வருகிறேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். தற்போது மின்காந்த சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த ஆண்டு அறுவைச் சிகிச்சையின்போது பொதுவான மயக்கமருந்து கொடுத்ததில் எதிர்விளைவு ஏற்பட்டதால் தற்போது முழங்காலில் அறுவைச் சிகிச்சையை விரும்பவில்லை எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.   

திருத்தூதுப் பயணங்கள்

காங்கோ மக்களாட்சி குடியரசுக்கும், தென் சூடானுக்கும் இப்போது நான் சென்றிருந்தால் கனடாவுக்குச் செல்ல முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அந்நாடுகளுக்குச் செல்லவில்லை எனவும், மாஸ்கோவுக்கு முதலிலும், உக்ரைனுக்கும் செல்ல விரும்புகிறேன், ஆனால் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன் என்றும், அப்பேட்டியில் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2022, 14:55