திருத்தந்தை:கியூபெக் பேராயர் இல்லத்தில் இயேசு சபையினர் சந்திப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
“கடந்த காலத்தில் தன் பிள்ளைகள் சிலரால் ஆற்றப்பட்ட தீமையால் கனடாத் திருஅவை புண்பட்டுள்ளது. அப்பிள்ளைகளால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்களுக்குப் பலியானவர்களிடம் மீண்டும் நான் மன்னிப்புக் கேட்கிறேன். நாம் உணர்கின்ற வேதனையும் அவமானமும், இத்தகைய தவறுகள் இனிமேல் ஒருபோதும் இடம்பெறக்கூடாது என்ற ஒரு மனமாற்றத்திற்கு அழைத்துச்செல்லும் தருணமாக மாறவேண்டும்”. இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 29, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் கனடா, திருத்தூதுப் பயணம் (#Canada #ApostolicJourney) என்ற ஹாஷ்டாக்குகளுடன் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டு, அந்நாளைய பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். கனடாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற பூர்வீக இனத்தவர், அக்கால ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின்போது, குறிப்பாக, சில ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் கடுந்துயரங்களையும், உரிமை மீறல்களையும், கலாச்சாரச் சீரழிவுகளையும் எதிர்கொண்டு, மனக்காயங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, ஒப்புரவு மற்றும், குணப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதே திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அந்நோக்கத்தை, இந்நாள்களில், கனடாவில் தவத் திருப்பயணமாக நிறைவேற்றிவரும் பயணத் திட்டங்களிலும், டுவிட்டர் செய்திகளிலும் திருத்தந்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது வெள்ளிடைமலை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 29, இவ்வெள்ளி கியூபெக் நேரம் காலை 7 மணிக்கு, கியூபெக் பேராயர் இல்லத்தில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றியபின்னர் காலை உணவை முடித்து, அவ்வில்லத்தில் கனடாவில் மறைப்பணியாற்றும் இயேசு சபை குழுமத்தினரைச் சந்தித்து உரையாடினார். இயேசு சபையைச் சார்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளும்போதெல்லாம் தனது இயேசு சபை உடன்பிறப்புக்களை மறக்காமல் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி மகிழ்ந்து, அவர்களின் மறைப்பணிகளை ஊக்குவித்து வருகிறார். இவ்வெள்ளி காலையில் கியூபெக் பேராயர் இல்லத்தில் இயேசு சபையினரை திருத்தந்தை சந்தித்தபோது, இந்திய-இலங்கை நேரம் இவ்வெள்ளி மாலை 6.30 மணியாக இருந்தது. இச்சந்திப்புக்குப்பின்பு, கியூபெக் நகர் பேராயர் இல்லத்தில், பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பது, கியூபெக் நகரிலிருந்து Iqaluit நகருக்கு விமானப் பயணம் மேற்கொள்வது, அந்நகரில், பூர்வீக இனத்தவர் மாணவர் விடுதிப் பள்ளியின் முன்னாள் மாணவர்களைச் சந்திப்பது, இளையோர் மற்றும், வயதுமுதிர்ந்தோரைச் சந்திப்பது, உரோம் நகருக்குப் புறப்படுவது போன்றவை இவ்வெள்ளி தின பயணத் திட்டத்தில் உள்ளன. நம் சான்று வாழ்வு வழியாக நற்செய்தி அறிவிக்கப்படும்போதுதான் அது மற்றவருக்கு விடுதலையளிக்கும் செய்தியாக இருக்கும் என்றெல்லாம் அழைப்புவிடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, ஜூலை 30, இச்சனிக்கிழமை இத்தாலி நேரம் காலை 7.50 மணிக்கு உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்