தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், பூர்வீக இனத் தலைவர் Wilton Littlechild திருத்தந்தை பிரான்சிஸ், பூர்வீக இனத் தலைவர் Wilton Littlechild  

பூர்வீக இனத் தலைவர் Wilton Littlechildன் வரவேற்புரை

திருத்தந்தையே, இன்றைய நம் சந்திப்பு, வருங்காலத் தலைமுறைகளுக்கு உண்மையான குணப்படுத்தல் மற்றும், உண்மையான நம்பிக்கையின் எதிரொலியாக அமையும் - Wilton Littlechild

மேரி தெரேசா: வத்திக்கான்

மஸ்குவாசிஸின் Bear பூங்காவில், கனடாவின் பூர்வீக இன மக்களைச் சந்தித்த நிகழ்வில்,  ஒரு பூர்வீக இனத் தலைவர் Wilton Littlechild அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். திருத்தந்தையே, இவ்வளவுதூரம் சிரமம் எடுத்து, நீண்ட பயணம் மேற்கொண்டு, ஒப்புரவு பயணத்தில் எம்மோடு நடப்பதற்கு எம் மத்தியில் வந்திருக்கின்றீர். தங்களை வரவேற்பதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறோம். பரந்த பூமியாகிய கனடா, First Nations, Métis, மற்றும்,  Inuit ஆகிய இனங்களின் பூர்வீகமாகும். இந்த மஸ்குவாசிஸ், Cree, Dene, Blackfoot, Saulteaux, மற்றும் Nakota Sioux ஆகிய எம் மூதாதையரின் பூமியாகும். இந்நிகழ்வில், பூர்வீக இனங்களின் முன்னாள் மாணவர் விடுதிப் பள்ளிகளில் இருந்தவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.  Cree மொழியில் "Usow-Kihew" எனவும், ஆங்கிலத்தில் Wilton Littlechild எனவும் அழைக்கப்படுகின்ற நான், கனடாவின் தலைமை ஆளுனர் Mary Simon, பிரதமர் Justin Trudeau ஆகியோரையும் மிகுந்த மரியாதையோடு வரவேற்கிறேன். கனடா அரசின் உண்மை மற்றும், ஒப்புரவு பணிக்குழுவின் முன்னாள் பொறுப்பாளர் என்ற முறையில், முன்னாள் மாணவர் விடுதிப் பள்ளிகள் குறித்து ஏறத்தாழ ஏழாயிரம் சாட்சியங்களைக் கேட்டறிந்துள்ளேன். வத்திக்கானில் தங்களைச் சந்தித்தபோதும், எமது மொழி, கலாச்சாரம், ஆன்மீகம், போன்றவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்பதை எடுத்துரைத்தோம். அச்சமயத்தில் திருத்தந்தையே தாங்கள் எம் பூமிக்கு வரும் ஆவலை வெளிப்படுத்தினீர்கள். அதன் வழியாக தற்போது தாங்கள் எம்மோடு நெருக்கமாக இருக்கும் தங்களது ஆழமான ஆவலை வெளிப்படுத்துகிறீர்கள். திருத்தந்தையே, தாங்கள் ஒரு திருப்பயணியாக, உண்மை, நீதி, குணப்படுத்தல், ஒப்புரவு மற்றும், நம்பிக்கையின் பாதையில் எம்மோடு நடப்பதற்கு இங்கு வந்துள்ளீர். இன்றைய நம் சந்திப்பு, வருங்காலத் தலைமுறைகளுக்கு உண்மையான குணப்படுத்தல் மற்றும், உண்மையான நம்பிக்கையின் எதிரொலியாக அமையும் என நம்புகிறேன். இவ்வாறு Wilton Littlechild அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். அதற்குப் பின்பு திருத்தந்தையும் அம்மகளுக்கு தன் எண்ணங்களை எடுத்துரைத்தார். இதுவே இத்திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை ஆற்றும் முதல் உரையாகும்.

இவ்வுரையை நிறைவுசெய்து அம்மக்களை ஆசிர்வதித்து, பூர்வீக இனங்களின் பிரதிநிதிகளைத் தனித்தனியே வாழ்த்தி, மீண்டும் காரில் எட்மன்டன் நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திங்கள் உள்ளூர் நேரம் பகல் ஒரு மணிக்கு எட்மன்டன் நகரின் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2022, 15:03