தேடுதல்

கனடாவின் பூர்வீக இனத்தவர் பூமியில் திருத்தந்தை பிரான்சிஸ்

Ermineskin பூர்வீக இனச் சிறாருக்கென நடத்தப்பட்ட மாணவர் விடுதிப் பள்ளியில் இறந்த சிறாரின் கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வட அமெரிக்க நாடான கனடாவில் ஜூலை 24 இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஒரு “தவத் திருப்பயணம்” என்று அடிக்கடி கூறியதை நாம் அறிந்திருக்கிறோம். அதற்குரிய காரணமும் நமக்குத் தெரிந்ததே. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 25, இத்திங்களன்று கனடா நாட்டின் மஸ்குவாசிஸ் (Maskwacis) பகுதியிலும், எட்மன்டன் நகரிலும் நிறைவேற்றிய நிகழ்வுகள், உண்மையிலேயே தவத் திருப்பயணத்தின் கூறுகளைக் கொண்டிருந்தன. உள்ளார்ந்த மனவருத்தம், மன்னிப்பு, ஒப்புரவு போன்ற சொல்லாடல்களையே திருத்தந்தை இந்நாளில் அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.

கனடாவின் மாணவர் விடுதிப் பள்ளிகள்

1894ஆம் ஆண்டுக்கும், 1947ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், கனடா அரசு, அந்நாட்டு பூர்வீக இன மக்களின் பிள்ளைகளுக்கென்று தொடங்கிய மாணவர் விடுதிப் பள்ளிகளில், கிறிஸ்தவ சபைகளால் மேற்கத்திய கலாச்சாரத் திணிப்பு நடத்தப்பட்டது. பூர்வீக இனத்தவரின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கையில் பிள்ளைகள் கடுமையான விதிமுறைகளால் நடத்தப்பட்டனர். நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய இப்பள்ளிகள் அமைப்பில் ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்டனர். 1930களில், பூர்வீக இனத்தவரின் பிள்ளைகளில் ஏறத்தாழ முப்பது விழுக்காட்டினர் இப்பள்ளிகளில் இருந்தனர் என ஒரு குறிப்பு கூறுகிறது. இப்பள்ளிகளில் பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெற்ற வன்கொடுமைகளில் 3,200 முதல், முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளைகள் இறந்திருக்கலாம் என்று விக்கிப்பீடியாவில் கூறப்பட்டுள்ளது. இவை குறித்த சரியான பதிவேடுகள் இல்லாததால் இவ்வெண்ணிக்கையை அறுதியிட்டு கூறமுடியவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் இறந்த பிள்ளைகள், கொத்து கொத்தாக புதைக்கப்பட்ட புதைகுழிகள் அண்மை ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தப் பின்புலத்தில், கனடாவின் பூர்வீக இனத்தவரிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களோடு ஒப்புரவாகும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மஸ்குவாசிஸ்

Ermineskin  மாணவர் விடுதிப் பள்ளி கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை செபிக்கிறார்
Ermineskin மாணவர் விடுதிப் பள்ளி கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை செபிக்கிறார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஜூலை 25, இத்திங்கள் காலையில், கனடாவின் எட்மன்டன் நகருக்குத் தெற்கே, ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மஸ்குவாசிஸ் (Maskwacis) பகுதிக்கு ஏறத்தாழ ஒரு மணி நேரம் காரில் பயணம் மேற்கொண்டார். மஸ்குவாசிஸ் என்ற பகுதி, கிராம மற்றும், நகர்ப்புற சூழலைக் கொண்டது. வட்டவடிவமான இப்பகுதியில், வட அமெரிக்க பூர்வீக இனத்தவர் தங்களின் புனித, கலாச்சார, மற்றும், சமூக கொண்டாட்டங்களை நடத்துகின்றனர். பொதுவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களில், அந்நாடுகளின், அரசு மற்றும், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள் போன்றோரைச் சந்தித்து அவர்களுக்கு உரையாற்றுவது முதல் பயண நிகழ்ச்சியாக இருக்கும். ஆனால், கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தை முதலில் அந்நாட்டு பூர்வீக இனங்களின் மக்களை, இரு இடங்களில் சந்தித்தார். இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, மஸ்குவாசிஸ் பகுதியின் வியாகுல அன்னை பங்குத்தள ஆலயத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆலய முகப்பிலேயே பங்குத்தந்தை, இன்னும், First Nations, Metis, Inuit ஆகிய பூர்வீக இனங்களின் மூத்த பிரதிநிதிகள் வரவேற்றனர். பின்னர் அவர்கள் திருத்தந்தையை ஒரு சிறிய golf வாகனத்தில் அமரவைத்து, தம்பூராக்களை இசைத்துக்கொண்டே கல்லறைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். மற்ற மக்கள் எவரும் இந்நிகழ்வில் அனுமதிக்கப்படவில்லை. அத்தோட்டத்தில் திருத்தந்தை சிறிதுநேரம் அமைதியாகச் செபித்தார். இவ்விடத்தில்தான், Ermineskin பூர்வீக இனச் சிறாருக்கென நடத்தப்பட்ட மாணவர் விடுதிப் பள்ளி இருந்தது. அப்பள்ளியில் இறந்த சிறாரின் கல்லறைகளும் இங்குதான் இருக்கின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கல்லறைத் தோட்டத்தில் செபித்தபின்னர், அதே golf காரில் அதற்கு அருகில் அமைந்துள்ள Bear பூங்காவிற்குச் சென்றார். அவ்விடத்தின் நுழைவாயிலில் கனடாவின் அனைத்து பூர்வீக இனங்களின் தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். தங்களின் மரபுப்படி திருத்தந்தையை உள்ளே அழைத்துச் சென்றனர். அந்நிகழ்வில் முதலில் ஒரு பூர்வீக இனத் தலைவர் Wilton Littlechild அவர்கள், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2022, 14:55