தேடுதல்

திருத்தந்தைக்கு எட்மன்டன் நகரில் வரவேற்பு

எட்மன்டன் விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்திருந்த பூர்வீக இனங்களின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியே கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஒரு “தவத் திருப்பயணமாக” கனடா நாட்டில் மேற்கொள்வதற்கு, ஜூலை 24, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.16 மணிக்கு, உரோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ITA A330 இத்தாலிய விமானத்தில் புறப்பட்டார். ஏறத்தாழ பத்து மணி 30 நிமிடங்கள் விமானப் பயணத்தை மேற்கொண்டு கனடாவின் எட்மன்டன் நகரின் பன்னாட்டு விமான நிலையத்தை, உள்ளூர் நேரம் இஞ்ஞாயிறு பகல் 11.09 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை. அப்போது இந்திய-இலங்கை நேரம் இஞ்ஞாயிறு இரவு 10.39 மணியாகும். எட்மன்டன் விமான நிலையத்தில், கனடா நாட்டுப் பிரதமர் Justin Trudeau, ஆல்பெர்த்தாவின் துணை ஆளுனர் Salma Lakhani, ஆளுனர் Mary Simon ஆகியோர் உட்பட சில முக்கிய அரசு மற்றும், திருஅவை அதிகாரிகள், First Nations, Metis, Inuit ஆகிய பூர்வீக இனங்களின் பிரதிநிதிகள் போன்றோர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றனர். மரபு ஆடைகளை அணிந்திருந்த இரு சிறார், மலர்கள் அளித்து திருத்தந்தையை வரவேற்றனர். விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பும் வழங்கப்பட்டது. பிரதமர் Trudeau அவர்களும், ஆளுனர் Mary Simon அவர்களும் அவ்விமான நிலையத்திலிருக்கும் சிறப்பு விருந்தினர் அறையில் திருத்தந்தையோடு சிறிது நேரம் தனியாக உரையாடினர்.

திருத்தந்தையை வரவேற்ற பூர்வீக இனங்களின் பிரதிநிதிகள்

திருத்தந்தையை வரவேற்ற பூர்வீக இனங்களின் பிரதிநிதிகள்
திருத்தந்தையை வரவேற்ற பூர்வீக இனங்களின் பிரதிநிதிகள்

கனடாவின் பூர்வீக இனங்களின் மக்களோடு இடம்பெற்றுவரும் குணப்படுத்தல், மற்றும், ஒப்புரவு நடவடிக்கைக்கு தன்னுடைய பங்கை அளிக்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டில் தொடங்கியுள்ள இத்திருத்தூதுப் பயணத்தில், எட்மன்டன் விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வே அதற்கு முதல் சான்றாகும். அங்கு திருத்தந்தையை வரவேற்பதற்கு தங்களின் மரபு உடைகளில் வந்திருந்த First Nations, Metis, Inuit ஆகிய பூர்வீக இனங்களின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியே கைகுலுக்கி வாழ்த்தினார் திருத்தந்தை. அவர்கள் அளித்த பரிசுப்பொருள்களையும் பெற்றுக்கொண்டார் அவர். மத்தளங்களோடு விமான நிலையத்திற்கு வந்திருந்த அப்பிரதிநிதிகள் பாடிய வரவேற்புப் பாடலையும் கேட்டு இரசித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். வட்ட வடிவத்தில் கிரீடம் போன்று அமைக்கப்பட்டுள்ள கனடா திருத்தூதுப் பயணத்தின் இலச்சினையை உருவாக்கியவர்  பூர்வீக இனத்தவரான, கலைஞர் Shaun Vincent என்பவராவார். அக்கால காலனி ஆதிக்கத்தின்போது அந்நிய கலாச்சாரத் திணிப்பு என்ற நடவடிக்கையில் பூர்வீக இனத்தவர் எதிர்கொண்ட துயரங்கள் மற்றும், அவமானங்களைச் சித்தரிப்பதாகவும், அவ்வினத்தவரின் மதிப்புமிக்க கலாச்சார விழுமியங்களை எடுத்துரைப்பதாகவும் இந்த இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஏறத்தாழ 3 கோடியே 80 இலட்சம் மொத்த மக்கள் தொகையில், ஏறத்தாழ நான்கு விழுக்காட்டினராக இருக்கின்ற பூர்வீக இனங்களின் மக்கள், தற்போது கனடா அரசின் அங்கீகாரத்தோடு வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எட்மன்டன் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்
எட்மன்டன் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்

விமான நிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டபின்னர், அங்கிருந்து 31.3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள புனித யோசேப்பு அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரிக்கு காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1927ஆம் ஆண்டில் பேராயர் Henry Joseph O’Leary அவர்கள், அக்கல்லூரியை தொடங்கி, அதை நிர்வகிக்கும் பொறுப்பை அமலமரி தியாகிகள் சபையினரிடம் ஒப்படைத்தார். காலப்போக்கில், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் அக்கல்லூரி 1957ஆம் ஆண்டிலும், 2010ஆம் ஆண்டிலும் இருமுறை இடமாற்றம் செய்யப்பட்டது. அக்கல்லூரியின் முன்புற வளாகத்தில் காத்திருந்த மக்களையும் ஆசிர்வதித்த திருத்தந்தையை, அக்கல்லூரியின் தலைவர்களும் மாணவர்களும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். நீண்ட விமானப் பயணத்தால் களைத்திருந்த 85 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கல்லூரியில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். இத்துடன் திருத்தந்தையின் கனடா நாட்டு முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2022, 15:13