தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே   திருத்தந்தை பிரான்சிஸ், ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே  

பிரதமர் அபேயின் படுகொலைக்கு திருத்தந்தை ஆழ்ந்த இரங்கல்

அமைதி, மற்றும், வன்முறையின்மைக்கு வரலாற்று ரீதியாக தன்னை அர்ப்பணித்துள்ள ஜப்பானிய சமுதாயம், அவற்றில் உறுதிப்படுத்தப்பட கடவுளை மன்றாடுகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) அவர்கள், படுகொலைசெய்யப்பட்டுள்ளது குறித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது இறப்பால் வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும், நாட்டினருக்கு தன் இதயம்நிறைந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜப்பானில் இந்த அறிவற்ற செயல் இடம்பெற்றுள்ள இவ்வேளையில், அமைதி, மற்றும், வன்முறையின்மை ஆகியவற்றுக்கு, வரலாற்று ரீதியாக தன்னை அர்ப்பணித்துள்ள ஜப்பானிய சமுதாயம், அவற்றில் உறுதிப்படுத்தப்பட இறைவேண்டல் செய்வதாகவும், திருத்தந்தை, தன் இரங்கலில் மேலும் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த இரங்கல் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஜப்பான் நாட்டின் திருப்பீடத் தூதர் பேராயர் லியோ பொக்கார்தி அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

ஜூலை 08, இவ்வெள்ளியன்று, 67 வயது நிரம்பிய அபே அவர்கள், Nara எனுமிடத்தின் இரயில் நிலையத்திற்கு வெளியே சாலையில் நின்றபடி, உள்ளூர் வேட்பாளருக்காகத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, துப்பாக்கியால் சுடப்பட்டார். அவர் மீது இருமுறை பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளால் இரத்தவெள்ளத்தில் சரிந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் அவர். ஷின்சோ அபே அவர்கள், நவீன காலத்தில், ஜப்பானில் நீண்டகாலம் பிரதமராகப் பணியாற்றியவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2022, 13:10