தேடுதல்

திருத்தந்தையுடன் கர்தினால் Claudio Hummes திருத்தந்தையுடன் கர்தினால் Claudio Hummes  

கர்தினால் Hummes அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி DOM CLAUDIO அவர்கள், “ஏழைகளை மறக்கவேண்டாம்” என்று என்னிடம் கூறியதை, என்றென்றும் எனது நினைவில் பசுமையாக வைத்திருக்கிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

பிரேசில் நாட்டில் ஜூலை 04, இத்திங்களன்று இறைவனடி சேர்ந்துள்ள 87 வயது நிரம்பிய கர்தினால் Claudio Hummes அவர்கள், நற்செய்தியின் விழுமியங்களுக்கும், திருஅவைக்கும் மிகுந்த அர்ப்பணத்தோடு நீண்ட காலமாக ஆற்றியுள்ள பணிகளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் எனவும், அவரது ஆன்மா நிறையமைதியடையத் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கர்தினால் Hummes அவர்களின் இறப்பைமுன்னிட்டு, SÃO PAULO உயர்மறைமாவட்டத்தின் இந்நாள் பேராயராகிய கர்தினால் Odilo Pedro Scherer அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், கர்தினால் Hummes அவர்கள், பிரேசில் தலத்திருஅவை, திருப்பீட தலைமையகம் உட்பட, அன்னை திருஅவை தன்னிடம் ஒப்படைத்த பல்வேறு மேய்ப்புப்பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றியவர் என்று பாராட்டியுள்ளார்.

குறிப்பாக, அண்மை ஆண்டுகளில் கர்தினால் Hummes அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமேசான் பகுதி திருஅவைக்கு, தன்னையே அர்ப்பணித்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி DOM CLAUDIO அவர்கள், “ஏழைகளை மறக்கவேண்டாம்” என என்னிடம் கூறியதை, என்றென்றும் எனது நினைவில் உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கர்தினால் Claudio Hummes அவர்கள் உயிரிழந்த செய்தியை தான் மிகுந்த கவலையோடு பெற்றேன் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Hummes அவர்களின் இறுதி வழியனுப்பும் திருவழிபாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசிரை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

கர்தினால் Hummes அவர்கள், காலநிலை மாற்றம், வறுமை, பூர்வீக இனத்தவர் பாதுகாப்பு உட்பட, பல்வேறு துறைகளில் சமூக ஆர்வலராகச் செயல்பட்டவர்.

கர்தினால் Hummes அவர்களின் மறைவோடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 207 ஆகவும், இவர்களில் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 116 ஆகவும் மாறியுள்ளன

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2022, 14:12