திருத்தந்தை: அமைதி, நம் ஒவ்வொருவரிடமிருந்து தொடங்குகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
உயிர்த்துடிப்புள்ள, அதேநேரம் காயப்பட்டுள்ள காங்கோ மக்களாட்சி குடியரசில், அமைதி நிலவ இடம்பெறும் இறைவேண்டலில் அனைவரும் இணையுமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 03, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், உரோம்வாழ் காங்கோ மக்களாட்சி குடியரசின் மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியில் வாழவும், அதனை ஒளிரச்செய்யவும் அழைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், காங்கோ மக்களின் இல்லங்கள், திருஅவை மற்றும், நாட்டில் அமைதி குடிகொள்ளவேண்டும் என்று செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (லூக்.10:1-12,17-20) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, நம் மகிழ்வின் ஊற்றாகிய இயேசு, நம்மை வியப்புக்களால் நிரப்புகிறார், மற்றும், நம் வாழ்வை மாற்றுகிறார் என்றும், இதுவே, சீடர்கள், கடவுளின் அருகாமை, மற்றும், ஆண்டவரின் வார்த்தையை அறிவிப்பதற்கு உந்துதலாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
உலகில் நாம் ஆற்றவேண்டிய பணி என்ன? வரலாற்றில் திருஅவையாக நாம் என்ன செய்யவேண்டும்? போன்ற கேள்விகளை நாம் நம்மையே கேட்டுக்கொண்டால், அவற்றுக்குரிய பதில் நற்செய்தியில் உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, நாம் மறைப்பணியாளர்களாக இருப்பதால், சாதாரண கிறிஸ்தவர்களாக வாழ்வதில் திருப்தி அடைய முடியாது என்று கூறியுள்ளார்.
தம் சீடர்களுக்கும், நம் ஒவ்வொருவருக்கும், இயேசு மூன்று மறைப்பணி வியப்புக்களைச் வைத்திருக்கிறார் என்றும், இப்பணிக்கு, பையோ, பாதுகாப்போ, உதவியோ எதுவுமே தேவையில்லை என்றும் கூறியுள்ள திருத்தந்தை, வசதிக்குறைவு, பணம் போன்றவை குறைபடுவதால் நம் திருஅவையின் முன்னெடுப்புகள் சரியாகச் செயல்படவில்லை என பல நேரங்களில் நினைக்கின்றோம், இது உண்மையல்ல, ஆனால் உண்மையான புகழ் இயேசுவிடமிருந்தே வருகிறது என்று கூறியுள்ளார்.
செல்வத்தில் நம்பிக்கை வைக்காமலும், பொருளாதார அல்லது மனிதவள வறுமை மீது அச்சம் கொள்ளாமலும் இருக்குமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, நாம் எவ்வளவுக்குச் சுதந்திரமாகவும், எளிமையாகவும் இருக்கின்றோமோ அந்த அளவுக்கு தூய ஆவியார் மறைப்பணியை வழிநடத்துவார், மற்றும், அதன் வியப்புக்களை எடுத்துரைக்கும் முக்கிய நபர்களாக அவர் ஆக்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மறைப்பணிக்கு நமக்குத் தேவையான ஒரே கருவி உடன்பிறந்த உணர்வாகும், ஏனெனில் தோழமையுணர்வின்றி எந்தவொரு மறைப்பணியும் நடைபெறுவதில்லை, மற்றவர் மீது அக்கறை காட்டும் பணியின்றி எந்தவொரு நற்செய்தி அறிவிப்பும் கிடையாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள், வெறுப்பு, மற்றும், பழிவாங்குதல் ஆகிய உணர்வுகளையும், மற்ற இனத்தவர் மீது வெறுப்புக்கு இட்டுச்செல்லும் தன் இனம் மீதுள்ள பற்றையும் தவிர்த்து, ஒப்புரவு இயலக்கூடியதல்ல என்ற சோதனையை வென்று, அமைதிக்குச் சான்றுகளாய் வாழுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
அன்புச் சகோதரர், சகோதரிகளே, அமைதி நம்மில் உள்ளது. அது, உங்களோடும் என்னோடும் ஒவ்வொருவரின் இதயத்திலும் பிறக்கின்றது என்றும், இயேசுவின் சீடர்கள் வன்முறையைப் புறக்கணிக்கவேண்டும், யாரையும் புண்படுத்தக் கூடாது, அனைவரையும் அன்புகூரவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
மேலும், ஜூலை 03, இஞ்ஞாயிறன்று, காங்கோ மக்களாட்சி குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் திருப்பலி நிறைவேற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், அந்நாட்டில் அமைதி திரும்பட்டும் என்று செபித்தார், மற்றும், அதற்காக விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்