தேடுதல்

உடன்பிறப்பு அன்புக்குச் சான்றுபகர்வதன் வழியாக இயேசுவை.....

மறைப்பணியில் உடன்பிறந்த உணர்வோடு செயலாற்றுகிறேனா அல்லது சுய விளம்பரத்துக்காக அதைச் செய்கிறேனா என்று சிந்தித்துப் பார்க்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஒருவரையொருவர் மதித்தல், மற்றும், உடன்பிறந்த உணர்வுகொண்ட அன்பு ஆகியவை வழியாக, இயேசுவுக்குச் சான்றுபகருமாறு, ஜூலை 03, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு, எழுபத்திரண்டு சீடர்களை தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் இருவர் இருவராக அனுப்பியது (லூக்.10:1-12,17-20) குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி தன் சிந்தனைகளை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

இறையாட்சியை அறிவிப்பதற்கு, இயேசு தம் சீடர்களைத் தனியாக அனுப்பாமல், இருவர் இருவராக அனுப்பியதற்குரிய காரணத்தை விளக்கிய திருத்தந்தை, இவ்வாறு இருவர் இருவராக அனுப்புவது, நடைமுறை கண்ணோட்டத்தில் நோக்கும்போது, நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்பதுபோல் தெரியலாம் என்று கூறியுள்ளார்.

இறையாட்சிப் பணியை மேற்கொள்கையில், இரு சீடர்களும் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகாமல் இருக்கலாம், அல்லது, ஒருவர் மற்றவரைவிட மாறுபட்ட வேகத்தில் செயல்படலாம், ஆனால் இயேசு இத்தகைய முறையில் சிந்திக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, தன்னை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு, தமக்குமுன்னே கிராமங்களுக்குச் செல்வதே சீடர்களின் பணி என்பதை வலியுறுத்த இயேசு இவ்வாறு அவர்களை அனுப்பினார் என்று கூறியுள்ளார்.  

ஒருவர் ஒருவரை மதித்தலில் கிறிஸ்துவை அறிவித்தல்

சீடர்கள், பணியாளர்கள் என்பதால், அவர்கள் தங்களின் நடத்தை வழியாக சான்றுபகர்ந்து நற்செய்தியை அறிவிக்கவேண்டும் மற்றும், இப்பணியில் முதலில் அவர்கள் இருவர் இருவராகச்  செல்லவேண்டியது முதல் நடைமுறை என்பதையும் இயேசு எடுத்துரைக்க விரும்பினார் எனத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சீடர்கள், ஒருவர் ஒருவருக்குப் பணிந்து நடக்காமல் போதிக்கும் சுதந்திரச் சவாரிகள் அல்ல, மாறாக, ஒன்றிணைந்து இருப்பது, ஒருவரையொருவர் மதிப்பது, மற்றவரைவிட தான் திறமைசாலி என எண்பிக்க விரும்பாமல் இருப்பது, ஒரே போதகரோடு தாங்கள் ஒத்திணங்கி இருப்பது ஆகியவற்றை அறிந்தவர்களாக, சீடர்கள் நற்செய்தியை அறிவிக்கவேண்டியது, அவர்கள் வாழ்வில் முதலும் முக்கியமானதும் ஆகும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.  

நிறைவான மேய்ப்புப்பணி திட்டங்கள் பலவற்றை உருவாக்கலாம், பெரிய கூட்டங்களைக் கூட்டலாம், ஆனால் அவற்றில், உடன்பிறந்த உணர்வுமீது ஆவல் இல்லையென்றால், நற்செய்தி அறிவிப்புப்பணி முன்னோக்கிச் செல்லமாட்டா என்றுரைத்த திருத்தந்தை,  ஆப்ரிக்காவின் ஒரு நாட்டிற்கு தன் உடன்சகோதரருடன் சென்ற மறைப்பணியாளர் பற்றிய கதையையும் எடுத்துரைத்துள்ளார். இந்த மறைப்பணியாளர் தன் உடன்சகோதரரை விட்டுவிட்டுத் தனியாக மறைப்பணித் திட்டங்களை ஆற்றியபோது, தான் ஒரு தொழில்முனைவராக மாறியிருப்பதை உணர்ந்தார், அதனால் அத்திட்டங்களைக் கைவிட்டுவிட்டு, தன் உடன்சகோதரருடன் வாழத்தொடங்கினார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.    

நற்செய்தியை அறிவிக்கும்போது உடன்பிறந்த உணர்வோடு செயலாற்றுகிறேனா அல்லது சுய விளம்பரத்துக்காக அதைச் செய்கிறேனா என்று சிந்தித்துப் பார்க்குமாறும் கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வுக்குச் சான்றுபகர்வதோடு ஆண்டவருக்குரிய வழியை அவரின் சீடர்கள் தயாரிக்கவேண்டும் என்றுரைத்து தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2022, 12:30